search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அளக்குடி கிராமத்தில் ஏற்பட்டுள்ள கரை உடைப்பு
    X
    அளக்குடி கிராமத்தில் ஏற்பட்டுள்ள கரை உடைப்பு

    கொள்ளிடம் ஆற்றில் அடுத்தடுத்து தடுப்பு சுவர் உடைப்பு - 2வது நாளாக சீரமைக்கும் பணி தீவிரம்

    அளக்குடியில் ஏற்பட்ட கரை உடைப்பை இன்று 2-வது நாளாகவும் பொதுப் பணித்துறையினர் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள் உதவியுடன் சீரமைத்து வருகின்றனர். #kollidamriver
    சீர்காழி:

    கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் தமிழகத்துக்கு உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் மேட்டூர் அணைக்கு 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. இதையொட்டி மேட்டூர் 2 முறை நிரம்பியது. உபரி தண்ணீர் அனைத்தும் பாசனத்துக்காக திருப்பி விடப்பட்டது.

    காவிரி தண்ணீர் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் வழியாக திருச்சி முக்கொம்பை வந்தடைந்தது. இங்கிருந்து காவிரி மற்றும் கொள்ளிடத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. குறிப்பாக கொள்ளிடத்தில் 2 லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் வந்தது.

    இதையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதில் குறிப்பாக கொள்ளிடத்தில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொள்ளிட கரையோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி பகுதியில் நேற்று முன்தினம் தடுப்பு சுவர் உடைப்பு ஏற்பட்டது.

    இந்த பகுதியில் கொள்ளிடம் ஆற்று வெள்ளம் கரையில் மோதி ‘எல்’ வடிவ திருப்பத்தில் சென்று திரும்பும். இதனால் ரூ.64 கோடி செலவில் ஆற்றுக்குள் 20 அடி ஆழம் முதல் 60 அடி ஆழம் வரை சிமெண்ட் கான்கிரீட் முனைகள் அமைத்து அதன்மேல் சுமர் 1200 மீட்டர் தூரத்துக்கு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் கடந்த 2013-ம் ஆண்டு முடிக்கப்பட்டது.

    இந்நிலையில் அளக்குடி கிராமத்தில் கொள்ளிட கரையில் ஏற்பட்ட உடைப்பால் சுற்றியுள்ள கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. முதலைமேடு, முதலைமேடுதிட்டு, நாதல்படுகை, வெள்ள மணல், மேலவாடி ஆகிய 5 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

    கொள்ளிடம் ஆற்றில் தற்போது 1 லட்சம் கனஅடி வரை தண்ணீர் ஆக்ரோ‌ஷமாக பாய்ந்து செல்கிறது. இதனால் கரையில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வேகமாக ஊருக்குள் சென்றது.

    இதற்கிடையே இதுபற்றி தகவல் கிடைத்ததும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கலெக்டர் சுரேஷ்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை அடுக்கி கரை உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஆற்றின் தண்ணீர் வேகத்துக்கு, சீரமைப்பு பணிகள் கைகொடுக்கவில்லை.

    இதையடுத்து பெரம்பலூர் மாவட்டததில் ராட்சத பாறாங்கற்கள் கொண்டு வரப்பப்பட்டு கரையோரம் அடுக்கி வைக்கப்பட்டன. அதன் மேல் மணல்மூட்டைகள் கொண்டு ராட்சத தடுப்பு போன்று அமைக்கப்பட்டது. இந்த முயற்சி ஓரளவு பலன் அளித்து வருகிறது.

    இதற்கிடையே அளக்குடியில் ஏற்பட்ட கரை உடைப்பை இன்று 2-வது நாளாகவும் பொதுப் பணித்துறையினர் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள் உதவியுடன் சீரமைத்து வருகின்றனர்.

    இதற்கிடையே கரை உடைப்பு காரணமாக முதலைமேடு, முதலைமேடு திட்டு, நாதல்படுகை, வெள்ள மணல், மேல வாடி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த 1000 பேர் தவித்து வருகின்றனர். அவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, துணிகள் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இந்த 5 கிராமங்களிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. இவைகளை உடனடியாக மீட்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றின் அளக்குடி கிராமத்தில் மற்றொரு இடத்திலும் கரை உடைப்பு ஏற்பட்டது. சுமார் 7 மீட்டர் அளவுக்கு ஏற்பட்ட உடைப்பை பொதுப் பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் ஆசைத்தம்பி, நாகை சிறப்பு திட்ட செயற்பொறியாளர் ஞானசேகரன் ஆகியோர் பார்வையிட்டு அங்கேயே முகாமிட்டு உடைந்து விழும் பகுதிகளிலும் கரையின் மறுபுறம் சிதைந்துள்ள பகுதிகளிலும் பாறை கற்களை போட்டு அமைக்கும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே கரை உடைப்பு காரணமாக அளக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 200 ஏக்கரில் மரவள்ளி கிழங்கு, கத்தரி, நெல் பயிர்கள் சேதமாகி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.  #kollidamriver
     
    Next Story
    ×