search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    1,000 பேராசிரியர்கள் நியமனம் பற்றி விசாரணை - ரூ.1 லட்சத்துக்கு போலி சான்றிதழ் விற்றது அம்பலம்
    X

    1,000 பேராசிரியர்கள் நியமனம் பற்றி விசாரணை - ரூ.1 லட்சத்துக்கு போலி சான்றிதழ் விற்றது அம்பலம்

    தமிழ்நாட்டில் பல்வேறு அரசு கல்லூரிகளுக்கு பணி நியமனம் பெற்ற 1,000 உதவி பேராசிரியர்களின் சான்றிதழ்கள் தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. #professorarrested

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு விடைத்தாள் மறு கூட்டலில் நடந்த முறைகேட்டைத் தொடர்ந்து பேராசிரியர்கள் நியமனத்திலும் முறைகேடு நடந்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    கடந்த 2015-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் அரசு கல்லூரிகளில் காலிப் பணியிடங்களுக்கு உதவிப் பேராசிரியர்கள் 1,000 பேர் நியமனம் செய்யப்பட்டனர். ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மூலம் இந்த நியமனம் நடந்தது.

    அப்போது பொன்னேரி அரசு கல்லூரிக்கு மகாலிங்கம் என்பவர் உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். பணி நியமனம் பெற்று கடந்த 3 ஆண்டுகளாக அங்கு இயற்பியல் துறை உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்தார்.

    அவர் சமர்ப்பித்த சான்றிதழ்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. மகாலிங்கம் பணியில் சேரும்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தனியார் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. (டாக்டரேட்) பட்டம் பெற்றதாக சான்றிதழ்கள் கொடுத்து இருந்தார். அந்த சான்றிதழ்களை கல்லூரி கல்வி இயக்குனரக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அவரது சான்றிதழ்கள் பீகார் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதை ஆய்வு செய்த பீகார் பல்கலைக்கழக நிர்வாகம் அது தங்கள் பல்கலைக் கழகம் வழங்கிய சான்றிதழ் அல்ல, போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. அதன்பேரில் பொன்னேரி அரசு உலகநாத நாராயணசாமி கல்லூரி முதல்வர் போலீசில் புகார் செய்தார். பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பேராசிரியர் மகாலிங்கத்தை கடந்த சனிக்கிழமை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதற்கு முன் கடந்த 2014-ம் ஆண்டு சென்னையில் உயர் கல்வித்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் வீட்டில் இருந்து ஏராளமான போலி சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டன.

    தொடர்ந்து 2016-ம் ஆண்டு நாமக்கல் அரசு கல்லூரியில் பீகார் பல்கலைக்கழகம் பெயரில் போலி சர்டிபிகேட் கொடுத்து 2 பெண் பேராசிரியைகள் பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்தியதில் 2 பேராசிரியைகளும் பணம் கொடுத்து போலியாக சர்டிபிகேட்கள் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

    பொன்னேரி கல்லூரி பேராசிரியர் மகாலிங்கம் கைது செய்யப்படுவதற்கு முன்பாக சென்னை மாநிலக் கல்லூரி உடற்கல்வி இயக்குனரும் இதேபோன்ற போலி சர்டிபிகேட் விவகாரத்தில் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருக்கிறார்.

    இதுவரை நடந்த முறைகேடுகள் பற்றி வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் முதல் முறையாக இந்த விவகாரத்தில் கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தொடர்ச்சியாக போலி சர்டிபிகேட் விவகாரம் வெளிவந்து கொண்டு இருப்பதால் அனைத்து பணி நியமனத்தின்போது அளித்த சான்றிதல்களை சரிபார்க்க கல்லூரி கல்வித்துறை இயக்குனரகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக 2015-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பல்வேறு அரசு கல்லூரிகளுக்கு பணி நியமனம் பெற்ற 1,000 உதவி பேராசிரியர்களின் சான்றிதழ்கள் தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

    கைதான பேராசிரியர் மகாலிங்கத்திடம் விசாரணை நடத்தியதில் இடைத்தரகர்கள் மற்றும் பீகார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இளநிலை அலுவலர்கள் மூலம் போலி சான்றிதழ்கள் பெற்றது தெரிய வந்துள்ளது.

    இந்த பி.எச்.டி. சான்றிதழ்கள் பீகார் பல்கலைக்கழகம் வழங்கியது போன்று ஒரிஜினல் போல இருக்கிறது. இதை தயாரிக்க அங்குள்ள ஊழியர்கள் துணை புரிந்து இருக்கிறார்கள். இவர்கள் தான் பீகார் பல்கலைக் கழகத்தின் சின்னம் மற்றும் சான்றிதழ் விவரங்களை அசல் போல நகல் எடுத்து வழங்கியுள்ளனர். இதில் பேராசிரியர்களுக்கும், பல் கலைக்கழக ஊழியர்களுக்கும் இடையே இடைத்தரகர்கள் செயல்பட்டுள்ளனர்.

    புரோக்கர்கள் ஒரு சர்டி பிகேட்டுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பணம் பெற்று இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேராசிரியர்களை தேர்வு செய்வதால் இந்த சான்றிதழ்களை உடனடியாக சரிபார்ப்பது கடினம் என்பதால் அது இடைத்தரகர்களுக்கும், பேராசிரியர்கள் பணியில் சேருபவர்களுக்கும் வசதியாக அமைந்து விடுகிறது. பின்னர் சான்றிதழ்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் போது சிக்கிக் கொள்கிறார்கள்.

    பீகார் மாநிலம் கல்வித் தரத்தில் மிகவும் பின் தங்கியுள்ளது. அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுவதற்கு யாரும் முன்வருவது கிடையாது. எனவேதான் அந்த மாநிலத்தில் இருந்து தயாரிக்கப்படும் போலி சான்றிதழ்கள் குறைந்த விலைக்கு எளிதில் கிடைத்து விடுகிறது.

    இந்த போலி சர்டிபிகேட் விவகாரம் பீகாரில் சமீபத்தில் வெளியாகி அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பீகார் மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஊழியர்கள் பலர் தலைமறைவாகி விட்டனர்.

    Next Story
    ×