search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு
    X

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாதுகாப்பு கருதி பரிசல்கள் இயக்கவும், குளிக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    மழையினால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

    இன்று காலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து 86 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    குடகு மாவட்டத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த 2 அணைகளில் இருந்து நீர்திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நீர் தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை அடைகிறது.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 7 மணிக்கு நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக இருந்தது. அதன் பிறகு நீர்வரத்து 2 லட்சத்து 12 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

    இன்று காலை தொடர்ந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கல் தொங்கு பாலத்தை தொட்டபடி காவிரி ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது.

    நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நேற்று தருமபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி ஒகேனக்கல், ஊட்டமலை, நாகர்கோவில், நாடார் கொட்டாய் மற்றும் நீர்அளவீடு செய்யப்படும் பிலிகுண்டுலு ஆகிய பகுதிகளில் நீர்வரத்தை பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒகேனக்கல் பகுதியில் காவிரி ஆறு 45 கிலோ மீட்டர் தூரம் காப்புக்காடுகளுக்கு இடையே ஓடுவதால் இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு வெள்ளப்பெருக்கால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

    ஒகேனக்கல், நாகர்கோவில் பகுதிகளில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள 31 வீடுகள் ஆற்று புறம்போக்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இவற்றில் சில வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அவற்றில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் 9 வீடுகளை தற்போது வெள்ளம் சூழ்ந்துள்ளது. அவற்றில் வசித்த 46 பேர் வெளியேற்றப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு கருதி பரிசல்கள் இயக்கவும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் மலர்விழி கூறினார்.

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து இருப்பதால் ஒகேனக்கல் ஐந்தருவி இருப்பதே தெரியாத அளவிற்கு தண்ணீர் செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. மெயின் அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஒகேனக்கல்லுக்கு மேலே ஆலம்பாடி பகுதியில் அஞ்செட்டிக்கு செல்லும் சாலையில் பிலிகுண்டுலு முன்பாக சாலையில் தண்ணீர் நிரம்பி செல்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் இருந்து அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை வழியாக ஓசூர் செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சாலையில் அந்த வழியாக யாரும் செல்லமுடியாத அளவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. #Hogenakkal #Cauvery
    Next Story
    ×