search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளிடம் ஆற்றில் ஒருவாரத்துக்கு பொதுமக்கள் இறங்க வேண்டாம் - தஞ்சை கலெக்டர் எச்சரிக்கை
    X

    கொள்ளிடம் ஆற்றில் ஒருவாரத்துக்கு பொதுமக்கள் இறங்க வேண்டாம் - தஞ்சை கலெக்டர் எச்சரிக்கை

    கொள்ளிடம் ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் ஒருவாரத்துக்கு பொதுமக்கள் இறங்க வேண்டாம் என்று கலெக்டர் அண்ணாதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார். #kollidamriver
    தஞ்சாவூர்:

    கர்நாடக, கேரளாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து அதிகளவு நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பை மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த நிலையில் மேட்டூருக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் திருச்சி முக்கொம்பில் இருந்தும், காவிரியில் இருந்தும் தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட உள்ளது. முக்கொம் பில் இருந்து கொள்ளிடத்துக்கு 28 ஆயிரத்து 26 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கல்லணைக்கு 10-ந்தேதி விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் வந்த தண்ணீர், நேற்று 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் கூடுதல் நீர் கல்லணைக்கு இன்று இரவு அல்லது நாளை காலை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கொள்ளிடத்தில் வினாடிக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் செல்ல வாய்ப்புள்ளது. ஆனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்பு இருக்காது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது கல்லணை கால்வாயில் இருந்து 28788 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    கல்லணைக் கால்வாயில் விநாடிக்கு 2,650 கன அடி தண்ணீ விடப்படுவதால் ராஜமடம் வாய்க்காலில் அதிக அளவில் விநாடிக்கு 350 கன அடி தண்ணீர் விடப்படுகிறது. இந்த வாய்க்காலில் இன்னும் சில நாட்களில் கடைமடைக்கு தண்ணீர் சென்றுவிடும்.

    காவிரியில் இந்த முறை வரும் கூடுதல் நீர் மூலம் கல்லணைக் கால்வாய் பாசனப் பகுதிக்கு ட்பட்ட 540-க்கும் அதிகமான ஏரி, குளங்கள் நிரப்ப வாய்ப்பு உள்ளது.

    இப்போதே கள்ளப் பெரம்பூர் ஏரி, சமுத்திரம் ஏரி நிரம்பிவிட்டன.

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    கல்லணைக்கு இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் தண்ணீர் வந்து விடும். இதனால் காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆறு அகலமானது என்பதால் அதைக்கடக்கும் போது கூடுதலாகத் தண்ணீர் வந்தால் தப்பிச் செல்வது சிரமம். எனவே ஒரு வாரத்துக்கு யாரும் கொள்ளிடம் ஆற்றைக் கடப்பதற்காக இறங்கி நடந்து செல்ல வேண்டாம். பள்ளமான பகுதியில் குளிக்க வேண்டாம். கால் நடைகளை ஆற்றுக்குள் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    விவசாயிகள் வயல்களைத் தயார்படுத்துதல், நாற்றங்கால் தயாரித்தல் போன்ற ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வேளாண் விரிவாக்க மையங்கிலும் நீண்டகால ரக விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார். #kollidamriver
    Next Story
    ×