search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹீலர் பாஸ்கர்
    X
    ஹீலர் பாஸ்கர்

    ஹீலர் பாஸ்கர் பயிற்சி மையத்தில் ஆய்வு நடத்த தயாராகும் வருவாய் துறையினர்

    ஹீலர் பாஸ்கர் பயிற்சி மையத்தில் கோவை தெற்கு ஆர்.டி.ஓ. தனலிங்கம் தலைமையிலான வருவாய் அலுவலர்கள் ஆய்வு நடத்த உள்ளனர். #healerbaskar
    கோவை:

    கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் ஹீலர் பாஸ்கர் (வயது 42). இவர் கோவைப்புதூரில் ‘நிஷ்டை வாழ்வியல் பயிற்சி மையம்’ நடத்தி வந்தார்.

    இம்மையத்தில் சுகப்பிரசவத்துக்கு இலவசப்பயிற்சி அளிப்பதாக விளம்பரம் செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து ஹீலர் பாஸ்கர், அவரது அலுவலக மேலாளர் சீனிவாசன் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    மையத்தில் போலீசார் சோதனை நடத்திய போது ஸ்டெதஸ்கோப், ரத்த அழுத்தம் அளவிடும் கருவி, சிரஞ்ச் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

    ஹீலர் பாஸ்கர் கடந்த 8 ஆண்டுகளாக நேச்சுரோபதி என்ற இயற்கை வழி மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான முறையான மருத்துவம் படித்ததற்கான சான்றிதழ்கள் எதுவும் அவரிடம் இல்லை.

    இவர் இயற்கை மருத்துவம் குறித்து யூடியூப்பில் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அதில் ஆங்கில மருத்துவ முறைகள் தவறு என்பது போல பேசி உள்ளார். இவரது பயிற்சி மையத்தில் கர்ப்பிணிகளும் ஆலோசனைகள் பெற்று வந்துள்ளனர்.

    இவர் பயிற்சியில் பங்கேற்பவர்களிடம் கட்டணம் வாங்குவது இல்லை என்றாலும் தனது அறக்கட்டளைக்கு நிதி உதவி செய்யுமாறு லட்சக்கணக்கில் வசூலித்ததாக கூறப்படுகிறது. கோவை திருப்பூர், சேலம், ஈரோடு என கொங்கு மண்டலம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா மாநிலங்களிலும் பல பயிற்சி முகாம்களை நடத்தி உள்ளார். இலங்கை, சிங்கப்பூர், குவைத் என வெளிநாடுகளிலும் பயிற்சி முகாம்களை நடத்தி லட்சக்கணக்கில் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.

    இவரது வெப்சைட்டில் வருகிற டிசம்பர் மாதம் வரை இவர் பயிற்சி நடத்த உள்ள இடங்கள் பற்றிய விவரங்கள் உள்ளன. தொடர்ந்து இம்மையம் இயங்கினால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    எனவே இம்மையத்தை மூட போலீசார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர். அதன்பேரில் கோவை தெற்கு ஆர்.டி.ஓ. தனலிங்கம் தலைமையிலான வருவாய் அலுவலர்கள் குழுவினர் இன்று இம்மையத்தில் ஆய்வு நடத்த உள்ளனர். #healerbaskar
     

    Next Story
    ×