search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் மறியல்
    X

    குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் மறியல்

    ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சீதஞ்சேரி - பென்னாலூர்பேட்டை இடையே சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு கொசஸ் தலை ஆற்றில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் சேமித்து வைத்து குழாய்கள் மூலம் பொது மக்களின் குடிநீர் தேவைக்காக வினியோகிக்கப்படுகிறது.

    ஆனால் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் கிராம மக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று விவசாய கிணறுகளிலிருந்து குடங்களில் குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டது.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் குடிநீர் வழங்க வலியுறுத்தி இன்று காலை அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் சீதஞ்சேரி - பென்னாலூர்பேட்டை ரோட்டில் ‘திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பென்னாலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பழுதடைந்த மின் மோட்டாரை சீர் செய்து குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் மறியல் போராட்டத்தால் சீதஞ்சேரி - பென்னாலூர்பேட்டை இடையே சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×