search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 96 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
    X

    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 96 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு இன்று காலை 7 மணி முதல் நீர்வரத்து 96 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
    ஒகேனக்கல்:

    கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றிர் சீறிபாய்ந்து தமிழகத்தை நோக்கி வந்தது.

    நேற்று காலை 8 மணிக்கு 44 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து பிற்பகல் 3 மணிக்கு 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இரவு 7 மணிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீரும், இரவு 9 மணிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீரும் வந்தது.

    இன்று காலை 7 மணி முதல் நீர்வரத்து 96 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நீரின் அளவை கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்பாசன அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    நீர்வரத்து அதிகரிப்பால் பிலிகுண்டுலுவில் இருந்து ஒகேனக்கல், மேட்டூர் வரை காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. ஒகேனக்கல் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஐவர் பாணி அருவியில் பாறைகளை மூழ்கடித்தபடி வெள்ளம் சீறிபாய்நது செல்கிறது. இதே போல சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ள நீர் கொட்டுகிறது.

    கடந்த 2013 -ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி ஒகேனக்கல்லுக்கு அதிகபட்சமாக 1 லட்சத்து 78 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் 96 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஒகேனக்கல் அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் பொங்கி பாயும் புதுவெள்ளத்தால் இன்று 8-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் உள்ள லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக பென்னாகரம் தாசில்தார் அழகுசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் மாரி ஆகியோர் நேற்று மாலை லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதி அதிபர்களை அழைத்து சுற்றுலா பயணிகள் யாரையும் 3 நாட்கள் தங்க வைக்க வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள்.

    மேலும் ஒகேனக்கல் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள். கிராம மக்கள் தங்களது கால்நடைகளையும், மேடான இடங்களுக்கு எடுத்து சென்றுள்ளனர்.

    தீயணைப்பு துறை, வருவாய்த் துறை, பொதுப் பணி மற்றும் வனத்துறையினர் ஆகியோர் தயார் நிலையில் உள்ளனர். போலீசாரும் ஊர்காவல் படையினரும் காவிரி கரையோரம் பகுதிகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள். காவிரி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    ஒகேனக்கல் முதல் மேட்டூர் வரை 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு காவிரி ஆறு செல்வதால், ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் காவிரி ஆற்றை கடக்க வேண்டாம் என்றும், மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

    தமிழக-கர்நாடக எல்லை பகுதிகள் ஒகேனக்கல் அருகே மாறுகொட்டாய் கிராமம் உள்ளது. இங்கு 50 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஒகேனக்கல்லுக்கு பரிசலில் வந்து பொருட்களை வாங்கி செல்வார்கள். மேலும் இவர்களது குழந்தைகள் ஒகேனக்கல் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

    கடந்த 1 வாரமாகவே காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பவில்லை. வெளியூரில் விடுதிகளில் தங்கி படித்து வரும் மாறுகொட்டாய் கிராம மாணவ-மாணவிகளை சொந்த ஊருக்கு வர வேண்டாம் என்று அவர்களது குடும்பத்தினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஒரு வாரத்திற்கு முன்பே அந்த கிராம மக்கள் தங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி சேமித்து வைத்துள்ளனர். காவிரி ஆற்றில் வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க படகுகளையும், பரிசல்களையும் தீயணைப்பு துறையினர் தயாராக வைத்துள்ளனர்.
    Next Story
    ×