search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் ஜெயிலில் ரவுடி கொலை - கைதிகள் 5 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு
    X

    புழல் ஜெயிலில் ரவுடி கொலை - கைதிகள் 5 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு

    புழல் ஜெயிலில் ரவுடி பாக்சர் முரளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து கைதிகள் 5 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    செங்குன்றம்:

    வியாசர்பாடி, சத்திய மூர்த்தி நகர், மல்லி தெருவை சேர்ந்தவர் முரளி என்கிற ‘பாக்சர்’ முரளி (வயது 36), பிரபல ரவுடியான இவர் மீது வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், கொடுங்கையூர், மாதவரம் போலீஸ் நிலையங்களில் 3 கொலை வழக்கு உள்ளிட்ட 16 வழக்குகள் உள்ளன.

    கடந்த மாதம் பாக்சர் முரளியை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    ஏற்கனவே பாக்சர் முரளியின் எதிர்தரப்பான வியாசர்பாடி ரவுடி நாகேந்திரனின் கூட்டாளிகள் சிலரும் பல்வேறு வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று காலை பாக்சர் முரளி சிறையில் உள்ள கழிவறைக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட நாகேந்திரனின் கூட்டாளிகள் வியாசர்பாடியை சேர்ந்த கார்த்திக், ஜோயல், சரண்ராஜ், பிரதீப், ரமேஷ் ஆகிய 5 பேர் அங்கு சென்றனர்.

    அவர்கள் பாக்சர் முரளியை உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். பின்னர் அலுமினிய தட்டை இரண்டாக உடைத்து அவரது கழுத்தை அறுத்தனர். மேலும் பிறப்பு உறுப்பையும் அறுத்து கொடூரமாக கொலை செய்தனர்.

    ஜெயிலுக்குள் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திட்டமிட்டு பாக்சர் முரளியை எதிர் கோஷ்டியினர் தீர்த்து கட்டி உள்ளனர்.

    இதையடுத்து கைதிகள் கார்த்திக், ஜோயல் உள்பட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க புழல் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கடும் கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்பில் உள்ள சிறையில் ரவுடிகளுக்கு இரும்பு கம்பி மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய தட்டு கிடைத்தது எப்படி? தாக்குதல் நடந்த போது சிறைக்காவலர்கள் அங்கு இல்லாதது ஏன்? சிறை அதிகாரிகள் யாரேனும் இந்த கொலைக்கு உதவினார்களா? என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்து உள்ளன.

    அதிகாரிகளின் முழு விசாரணைக்கு பின்னரே ‘பாக்சர்’ முரளியின் கொடூர கொலைக்கு பின்னால் உள்ள மர்மங்கள் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரவுடி நாகேந்திரன் ஏற்கனவே கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். தற்போது சிறுநீர் கோளாறால் அவதிப்பட்ட அவரை சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். ஆஸ்பத்திரியில் இருந்து செல்லும்போது நாகேந்திரனை தீர்த்துக்கட்ட ‘பாக்சர்’ முரளி வெளியில் உள்ள தனது ஆட்களுடன் திட்டம் தீட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த நாகேந்திரன் சிறையில் உள்ள கூட்டாளிகள் மூலம் பாக்சர் முரளியை கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரன் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். அவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    Next Story
    ×