search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் - 6 வழிபாதையாக மாற்றம்
    X

    மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் - 6 வழிபாதையாக மாற்றம்

    மதுரவாயல் பறக்கும் சாலையின் நான்கு வழிப்பாதையை 6 வழிப்பாதை சாலையாக மாற்றி அமைக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை துறைமுகம்- மதுரவாயல் இடையே கண்டெய்னர் லாரிகள் செல்வதற்காக 19 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் சாலை திட்டம் செயல் படுத்தப்படுகிறது.

    முதலில் கூவம் ஆற்றின் நடுவில் நீரோட்டம் பாதிக்கும் வகையில் தூண்கள் அமைத்து பறக்கும் சாலை அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு புதிய வழித்தடத்தில் நிறைவேற்றப்படுகிறது. இதனால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

    இந்த பறக்கும் சாலை 17 மீ. அகலத்தில் 4 வழிப்பாதையாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு 26 மீ. அகலத்தில் 6 வழிப்பாதையாக மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த பறக்கும் சாலை திட்டத்துக்கு ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    சென்னை துறைமுகத்தில் இருந்து நேப்பியர் பாலம் வரை மட்டும் 4 வழிப்பாதையாக இருக்கும். அதன்பிறகு நேப்பியர் பாலத்தில் இருந்து மதுரவாயல் வரை 6 வழிப் பாதையாக இருக்கும். மதுர வாயலில் வாகனங்கள் நிறுத்தும் நிலையம் அமைக்கப்படும். இதனை சி.எம்.டி.ஏ. அமைத்து நிர்வகிக்கும். இங்கிருந்து புறப்படும் சரக்கு வாகனங்கள் எங்கும் நிற்காமல் நேராக துறை முகத்தை சென்றடையும்.

    பறக்கும் சாலையின் இடையே 10 இடங்களில் நுழையும் வழிகளும், வெளியேறும் வழிகளும் அமைக்கப்படுகிறது. வெளியேறும் வழிகள் காமராஜர் சாலை, ஸ்பர்டேங்க் சாலை, கோயம்பேடு ஆகிய இடங்களிலும், நுழையும் வழிகள் சிவானந்தா சாலை, கல்லூரி சாலை, கோயம்பேடு ஆகிய இடங்களிலும் அமைக்கப்படுகிறது.

    கூவத்தில் மாற்றி அமைக்கப்பட்ட பாதையில் 685 தூண்கள் கட்டப்பட்டு அதன் மீது பறக்கும் சாலை இணைக்கப்படும்.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் மற்றும் உள்ளே செல்லும் வெளியூர் பஸ்கள் பறக்கும் சாலையின் இருபுறமும் அமைக்கப்படும் சாலையில் செல்ல வசதியாக இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்படும்.

    தற்போது கண்டெய்னர் லாரிகள் துறைமுகத்துக்கு செல்ல 3 மணி நேரம் ஆகிறது. பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டால் 20 முதல் 30 நிமிடங்களில் செல்லலாம். இதன் மூலம் பயண நேரம் குறையும், எரிபொருள் செலவும் மிச்சமாகும்.

    தற்போது சென்னை துறைமுகம் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக கண்டெய்னர்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டு சரக்கு ஏற்றுமதி-இறக்குமதி பாதிக்கப்படுகிறது. பறக்கும் சாலை திட்டத்தின் மூலம் சென்னை மற்றும் பக்கத்து மாநிலங்களில் உற்பத்தியாகும் கார்கள் மற்றும் இதர உற்பத்தி பொருள்கள் ஏற்றுமதி அதிகரிக்கும்.

    இந்த பறக்கும் சாலையை பஸ்கள், வேன்கள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் முழுவதும் பயன்படுத்த முடியாது. குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே செல்ல முடியும்.

    மாநில அரசு, சென்னை துறைமுகம், தேசிய நெடுஞ்சாலை ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்றுகின்றன. சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், திட்டத்தின் ஒரு அங்கமான ‘பாரத் மாலா’ திட்டத்தின் கீழ் இந்த பறக்கும் சாலை நிறைவேற்றப்படுகிறது. #tamilnews

    Next Story
    ×