search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை செயலாளர் உத்தரவை ரத்து செய்த புதுவை கவர்னர்
    X

    தலைமை செயலாளர் உத்தரவை ரத்து செய்த புதுவை கவர்னர்

    புதுவை சட்டமன்ற சபாநாயகரின் உத்தரவையே செல்லாது என கவர்னர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், அமைச்சரவைக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

    மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் பணிகளில் கவர்னர் குறுக்கீடு செய்வதாக அமைச்சர்கள் புகார் செய்து வருகிறார்கள். கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்ற நாள் முதல் வார இறுதி நாட்களான சனி மற்றும ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவையின் பல்வேறு பகுதிகளுக்கு தன்னிச்சையாக அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

    ஆனால், இது தொடர்பாக அந்த தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. அதோடு சில பகுதிகளில் திட்டங்களை தொடங்கி வைத்தும், திட்டங்களுக்கு பெயர் சூட்டியும் வருகிறார். இது எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.

    இந்த நிலையில் கடந்த வாரம் கவர்னரின் அறிவுறுத்தலின் பேரில் புதுவை நகராட்சி செயலாளர் சந்திரசேகரன் முதலியார் பேட்டையில் துப்புரவு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மகளிர் சுய உதவி குழு கூட்டத்தை நடத்தினார்.

    இதுபற்றிய தகவல் அந்த தொகுதியின் அதி.மு.க. எம்.எல்.ஏ. பாஸ்கருக்கு தெரிவிக்கப்படவில்லை.

    இதையடுத்து பாஸ்கர் எம்.எல்.ஏ. கூட்டம் நடந்த இடத்துக்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தார். இதில் பாஸ்கர் எம்.எல்.ஏ.வுக்கும், நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது

    தனக்கு தெரியாமல் கூட்டம நடத்தியதால் தன்னுடைய உரிமை பாதிக்கப்பட்டதாக கூறி பாஸ்கர் எம்.எல்.ஏ. நகராட்சி ஆணையாளர் மீது சட்டமன்ற உரிமை மீறல் குழுவிடம் புகார் செய்தார்.

    இதையடுத்து 3 நாட்களுக்கு பிறகு நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரன் பாஸ்கர் எம்.எல்.ஏ. மீது போலீசில புகார் செய்தார்.

    தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அவதூறாக திட்டியதாகவும் புகாரில் நகராட்சி ஆணையாளர் கூறி இருந்தார். ஆனால், இதுவரை புகார் மீது வழக்கு பதிவு செய்யவில்லை.

    இந்த நிலையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக கூடிய சட்டசபையில் இந்த பிரச்சினை விசுவரூபம் எடுத்தது. எம்.எல்.ஏ.க்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடும் கவர்னரை திரும்ப பெற தீர்மானம் கொண்டு வர வேண்டும் என ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுத்தனர்.

    மேலும் கவர்னரின் தூண்டுதலின் பேரில் எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார் செய்த நகராட்சி ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல். ஏ.க்கள் வலியுறுத்தினர்.

    இதனையடுத்து சபா நாயகர் வைத்திலிங்கம் உரிமை மீறல் குழு விசாரணை முடியும் வரை நகராட்சி ஆணையாளரை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்க உத்தரவிட்டார்.


    சபாநாயகரின் உத்தரவை தொடர்ந்து புதிய நகராட்சி ஆணையாளராக கலை, பண்பாட்டுத்துறை இயக்குனர் கணேசன் நியமிக்கப்பட்டார். நகராட்சி ஆணையாளராக இருந்த சந்திரசேகரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

    இந்த நடவடிக்கைகளின் போது கவர்னர் கிரண்பேடி டெல்லியில் முகாமிட்டு இருந்தார். தனக்கு ஆதரவான அதிகாரி மாற்றம் செய்யப்பட்டது கவர்னருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக தனது கருத்தை டுவிட்டரில் கவர்னர் வெளியிட்டார்.

    மேலும் சமூக வலைத்தளமான வாட்ஸ்- அப்பில் தனது கருத்தை பதிவு செய்தார். அதில், ஆணையாளர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை வரம்பு மீறியது என்றும், தன்னுடைய ஆலோசனைக்கு பிறகு நடவடிக்கை எடுக்குமாறு தலைமை செயலாளரை அறிவுறுத்தியும் அவர் காத்திருக்காமல் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் கூறி இருந்தார்.

    அதோடு இத்தகைய நடவடிக்கைகள் அதிகாரிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தும் என்றும் இனி அதிகாரிகள் தானாக செயல்பட மாட்டார்கள். ஒவ்வொரு முறையும் அரசின் ஆணைக்காக காத்து இருப்பார்கள். இது பொது சேவையில் பெரும் தடையை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    அதோடு கவர்னர் கிரண்பேடி தனது செயலாளர் தேவநீதிதாஸ் மூலம் சபாநாயகர் வைத்திலிங்கத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் குடிமை பணி அதிகாரிகளை மாற்றும் அதிகாரம் கவர்னருக்கே உள்ளது என்றும், சபா நாயகர் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.

    ஆனால், அந்த கடிதத்தில் கவர்னரின் கையெழுத்து இல்லை. இதனால் சபா நாயகர் வைத்திலிங்கம் அந்த கடிதத்தை வாங்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டார்.

    இதனை அடுத்து தனக்கு இருக்கும் அதிகாரத்தை வெளிப்படுத்தும் விதமாக கவர்னர் கிரண்பேடி நகராட்சி ஆணையாளரை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது செல்லாது என்று தலைமை செயலாளர் உத்தரவை ரத்து செய்து அறிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமை செயலாளர் மனோஜ் பரிதாவுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.

    அந்த கடிதத்தில் நகராட்சி ஆணையாளரை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கும் உத்தரவு செல்லாது என்றும், அவர் ஆணையாளராகவே தொடருவார் என்றும் கூறியுள்ளார்.

    மேலும் இது தொடர்பான குழு விவர அறிக்கையை தனது தலைமை செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவும் பிறப்பித்துள்ளார்.

    சட்டமன்ற சபாநாயகர் எடுக்கும் உத்தரவு என்பது நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவுக்கு சமமானது. அப்படி இருக்க, புதுவை சட்டமன்ற சபாநாயகரின் உத்தரவையே செல்லாது என கவர்னர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த பிரச்சினையின் மூலம் மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரமா? கவர்னருக்கு அதிகாரமா? என்ற அதிகார போட்டி பகிரங்கமாக வெடித்துள்ளது.
    Next Story
    ×