search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் ஸ்டாலினை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள், கொடி கம்பங்கள் அகற்றம்
    X

    தூத்துக்குடியில் ஸ்டாலினை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள், கொடி கம்பங்கள் அகற்றம்

    தூத்துக்குடியில் ஸ்டாலினை வரவேற்று தி.மு.க.வினர் வைத்த பேனர்கள், கொடி கம்பங்கள் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நாளை (5-ந்தேதி) தி.மு.க. மகளிரணி மாநில துணை செயலாளர் கீதாஜீவன் இல்ல திருமண விழா நடக்கிறது. அதில் கலந்து கொள்ள தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வருகிறார். சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக அவர் தூத்துக்குடி வருகிறார் என்பதால் அவரை வரவேற்கும் விதமாக தி.மு.க.வினர் அதிக இடங்களில் நேற்று இரவு டிஜிட்டல் பேனர்கள் வைத்தனர்.

    மேலும் அவர் செல்லும் பகுதிகளான புதிய பஸ்நிலையம், புதூர்பாண்டியபுரம், பழைய பஸ்நிலையம், 3-ம் மைல் என வழிநெடுகிலும் தி.மு.க. கொடிகள் வைத்து வரவேற்க தயார் நிலையில் இருந்தனர். இதில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தி.மு.க. சார்பில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நகர போலீசார் டவுன் ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் இரவோடு இரவாக அனைத்து டிஜிட்டல் பேனர்களையும் ஒன்றன் பின் ஒன்றாக அகற்றினர்.

    பேனர்களை அகற்றும் பணியில் ஏ.எஸ்.பி. முன்னிலையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் 40-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். மேலும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த தி.மு.க. கட்சி கொடிகளையும் லாரிகளில் அகற்றி எடுத்து சென்றுள்ளனர்.

    வழக்கமாக அனுமதி பெறாமல் போர்டுகள் வைத்தாலே போலீசார் வந்து சம்பந்தபட்டவர்களே அகற்றிவிடுவதற்கு அவகாசம் கொடுப்பார்கள். ஆனால் இம்முறை போலீசார் அவர்களே இரவோடு இரவாக அகற்றி சென்றுள்ளனர். தாங்கள் வைக்கப்பட்ட போர்டுகள் சில மணி நேரத்திற்குள்ளேயே அகற்றப்பட்டதால் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இது குறித்து தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி கூறுகையில், ‘தூத்துக்குடியில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் வருகைக்காக கட்சியினர் வைத்துள்ள டிஜிட்டல் பேனர்களை போலீசார் அவசர அவசரமாகவும், நள்ளிரவில் வைத்தவர்களுக்கே தெரியாமல் அகற்றி சென்றுள்ளனர். சம்பந்தபட்ட பகுதி காவல் நிலையங்களில் அனுமதி பெறப்பட்டு வைக்கப்பட்டுள்ள போர்டுகள் அகற்றப்பட்டுள்ளன.

    இதற்கு முன்னர் இல்லாத விதமாகவும், அவசரமாகவும் தற்போது போலீசார் இதில் ஈடுபட்டு இருப்பதும், கட்சி கொடிகளையும் அகற்றி சென்றிருப்பதும் கண்டனத்திற்குரியது. மேலும் கட்சிகளின் ஜனநாயக உரிமையை பறிப்பதுபோலும் நடந்துள்ளது’ என்றார்.

    ஸ்டாலினை வரவேற்று தி.மு.க.வினர் வைத்த பேனர்கள், கொடி கம்பங்கள் அகற்றப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×