search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    20 ஆடுகள் கொல்லப்பட்ட தொழுவம் ரத்தக்காடாக காட்சி அளிக்கிறது.
    X
    20 ஆடுகள் கொல்லப்பட்ட தொழுவம் ரத்தக்காடாக காட்சி அளிக்கிறது.

    கள்ளக்குறிச்சி அருகே 20 ஆடுகளை கொன்று கடத்திய மர்ம கும்பல்: போலீசார் விசாரணை

    கள்ளக்குறிச்சி அருகே 20 ஆடுகளை கொன்று கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்காத்தான் பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு (வயது 57). விவசாயி.

    இவர் சொந்தமாக 24 ஆடுகளை வளர்த்து பராமரித்து வந்தார். அதில் 4 ஆடுகள் சினை ஆடுகள். தினமும் ஆடுகளை வெளியே கொண்டு மேய்த்து விட்டு வீட்டின் முன்புறம் அமைத்துள்ள தொழுவத்தில் அடைத்து வைப்பது வழக்கம்.

    அதேபோல் நேற்று மாலை மேய்ச்சலை முடித்து விட்டு 24 ஆடுகளையும் தொழுவத்தில் அடைத்து வைத்திருந்தார்.

    இதையறிந்த மர்ம கும்பல் நேற்று நள்ளிரவு ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த தொழுவத்திற்குள் புகுந்தது. கண் இமைக்கும் நேரத்தில் 20 ஆடுகளின் கழுத்தை அறுத்தது. சிறிது நேரத்தில் 20 ஆடுகளும் துடிதுடித்து இறந்தன. ஆடுகள் இறந்து கிடந்த இடம் ரத்தக்காடாக காட்சி அளித்தது. சினையாக இருந்த 4 ஆடுகளை வெட்டாமல் விட்டு விட்டனர்.

    கொல்லப்பட்ட 20 ஆடுகளில் ஒரு ஆட்டை மட்டும் அங்கேயே போட்டு விட்டு மீதி 19 ஆடுகளை மர்ம கும்பல் தாங்கள் வந்த வாகனத்தில் ஏற்றி சென்று விட்டனர்.

    காலையில் எழுந்த தங்கவேலு தொழுவத்திற்கு சென்றார். தொழுவம் ரத்தக்காடாக கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளது என்று கதறி துடித்தார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    பின்னர் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதி இறைச்சி கடையில் தான் வளர்த்து வந்த ஆட்டின் தலை ஒன்று இருப்பதை தங்கவேல் பார்த்தார். இது நாம் வளர்த்த ஆட்டுத்தலை மாதிரி உள்ளதே என்று நினைத்தார். ஆட்டுத்தலையை கையில் எடுத்துக் கொண்டு நேராக கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையம் சென்றார்.

    போலீசார் என்ன... ஏது... என்று விசாரித்தனர். அப்போது தங்கவேல் எனது தொழுவத்துக்குள் நேற்று நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் நான் வளர்த்து வந்த 20 ஆடுகளை வெட்டி கொன்று வாகனத்தில் கடத்தி சென்று விட்டனர்.

    அதில் ஒரு ஆட்டின் தலை சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் இருக்கும் இறைச்சி கடையில் இருந்ததை பார்த்தேன். அதை அப்படியே எடுத்துக் கொண்டு வந்துள்ளேன்.

    இந்த சம்பவத்தில் இறைச்சி கடையில் பணியாற்றும் உலகங்காத்தான் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், கனியாமூர் பகுதியை சேர்ந்த சின்னத்துரை ஆகியோர் மீது சந்தேகம் உள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

    அதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன், அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இது பற்றிய தகவல் பரவியதும் பொதுமக்கள் தங்கவேலு வீடு முன்பு வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.

    20 ஆடுகளை கொன்று கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்திஉள்ளது.
    Next Story
    ×