search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருப்பு பணத்தை மாற்றித்தருவதாக கூறி ரூ.34 லட்சம் மோசடி: சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது?
    X

    கருப்பு பணத்தை மாற்றித்தருவதாக கூறி ரூ.34 லட்சம் மோசடி: சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது?

    அரியலூர் லாட்ஜில் கருப்பு பணத்தை மாற்றித்தருவதாக கூறி ரூ.34 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மகனை கைது செய்த போலீசார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து பொதுமக்கள் தாங்கள் வைத்திருந்த பழைய நோட்டுகளை முறைப்படி வங்கி, அஞ்சல் அலுவலகத்தில் கொடுத்து மாற்றி வருகின்றனர். ஆனால் அதிகளவு ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பதுக்கி வைத்திருப்பவர்கள் அதனை மாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.

    வங்கிகளில் அதிகளவில் பணம் டெபாசிட் செய்பவர்களின் பட்டியலையும் மத்திய அரசு தயாரித்து, தீவிரமாக கண்காணித்து வருகிறது. பணபரிவர்த்தனைகளின் போது விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும், முறைகேடு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வங்கி மேலாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்தநிலையில் தஞ்சாவூரை சேர்ந்த கதிரவன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் சிலர், அரியலூர் மேல அக்ரகாரம் பகுதியிலுள்ள ஒரு லாட்ஜில் கடந்த 27-ந்தேதி அறை எடுத்து தங்கினர். பின்னர் தஞ்சாவூரிலுள்ள சில முக்கிய பிரமுகர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கருப்பு பணத்தை மாற்றி தருவதாக கதிரவன் கூறினார். அதன்பேரில் தஞ்சையை சேர்ந்த பல்வேறு நபர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கதிரவன் மற்றும் அவரது கும்பலை சேர்ந்தவர்கள் பெற்றுக்கொண்டனர்.

    மேலும் கும்பகோணத்தில் இருந்து ரூ.34 லட்சத்திற்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் உள்பட செல்லுபடியாகும் நோட்டுகளை ஒரு பையில் வைத்துக்கொண்டு பேரம் பேசுவதற்காக அரியலூர் லாட்ஜூக்கு மற்றொரு கும்பல் வந்தது. தஞ்சாவூரை சேர்ந்த கதிரவன் கும்பலுக்கும், கும்பகோணத்தை சேர்ந்த கும்பலுக்கும் இடையே கருப்பு பணத்தை மாற்றுவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேரம் நடந்தது.

    அப்போது அந்த 2 கும்பலுக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் நடந்து அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் இது குறித்து அரியலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள், கும்பகோணத்தை சேர்ந்த கும்பலிடமிருந்து ரூ.34 லட்சத்தை பறித்துக்கொண்டு கதிரவன் உள்ளிட்டோர் தப்பி ஓடிவிட்டனர்.

    கருப்பு பண விவகாரம் என்பதால் பணத்தை பறிகொடுத்த நபர்களும் வெளியே சொல்ல முடியாமல் தலைமறைவாகிவிட்டனர். லாட்ஜில் சோதனை நடத்தி விசாரித்த போதுதான் மேற்கண்ட தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடி யோவை போலீசார் ஆதாரமாக வைத்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து கும்பகோணத்தில் துணிக்கடை நடத்தி வரும் அபு அரியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மோசடியில் ஈடுபட்டதாக அரியலூரை சேர்ந்த வினோத், தஞ்சாவூரை சேர்ந்த கதிரவன், அருண்குமார் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 2 பேர் என மொத்தம் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதில் வினோத் என்பவரை போலீசார் இன்று கைது செய்து, கருப்பு பணம் மாற்றம் தொடர்பாக ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விசாரணை முடிவில் பல் வேறு விவரங்கள் தெரிய வரும். வினோத்தின் தந்தை சேகர் செந்துறை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×