search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் அதிகாரிகள்- போலீசார் விடிய விடிய வாகன சோதனை
    X

    அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் அதிகாரிகள்- போலீசார் விடிய விடிய வாகன சோதனை

    தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    அரவக்குறிச்சி:

    தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 19-ந்தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தது.

    இதையடுத்து அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரி சர்புதீன் தலைமையிலான அதிகாரிகள் தேர்தலுக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    தேர்தல் விதிமுறைகள் மீறலை தடுக்கவும், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க அரவக்குறிச்சி தொகுதியில் 6 பறக்கும்படைகள், 6 நிலைக்குழுக்கள், 3 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் என மொத்தம் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

    பறக்கும் படை தலைமை அலுவலர் அமுதா தலைமையில் பறக்கும் படையினர் அரவக்குறிச்சி, க.பரமத்தி, சின்னதாராபுரம், சென்னிலை, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல ஆண்டிப்பட்டி கோட்டை சுங்கச்சாவடி அருகே, புங்கம்பாடி பிரிவு ரோடு, தாராபுரம் பிரிவு ரோடு, ராஜபுரம் பிரிவு ரோடு ஆகிய இடங்களிலும் பறக்கும் படையினர் அந்த வழியாக கடந்து செல்லும் கார் மற்றும் வாகனங்களை போலீசார் துணையுடன் தீவிர சோதனையிட்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது வீடியோ குழுவினர் அதனை வீடியோவில் பதிவு செய்கின்றனர்.

    அரவக்குறிச்சி தொகுதியில் மேலும் முக்கியமான சாலைகளில் தற்காலிகமாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. எத்தனை இடங்களில் அமைப்பது தொடர்பாக போலீசார் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இன்று அல்லது நாளை (வெள்ளிக்கிழமை) தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.

    நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை ஆண்டிப்பட்டி கோட்டை, பள்ளப்பட்டி, மொண்டி யூத்தான்கரை, தடாகோவில் ஆகிய இடங்களில் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×