search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமுதாயத்தில் அனைவரும் சமமானவர்கள்: சமுதாய நல்லிணக்க மாநாட்டில் சக்தி அம்மா பேச்சு
    X

    சமுதாயத்தில் அனைவரும் சமமானவர்கள்: சமுதாய நல்லிணக்க மாநாட்டில் சக்தி அம்மா பேச்சு

    சமுதாயத்தில் அனைவரும் சமமானவர்கள் தான். எந்த வேதமும், சாஸ்திரங்களும் ‘உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள்’ என்று யாரையும் கூறவில்லை. நாம் அனைவரும் ராமானுஜரின் கொள்கையை பின்பற்ற வேண்டும் என சக்தி அம்மா பேசினார்.

    வேலூர்:

    ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்திவிழாவை முன்னிட்டு வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் நேற்று இரவு சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு ஜெயந்தி விழாக்குழு தலைவரும், நாராயணிபீடம் இயக்குனருமான எம்.சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். விழாக்குழு பொதுச்செயலாளர் மு.ஜெகதீசன் முன்னிலை வகித்தார்.

    மாநாட்டை ஸ்ரீபுரம் நாராயணிபீடம் சக்தி அம்மா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து அருளாசி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பரம்பொருள் என்பது ஒன்றுதான். அரிசியில் இருந்து தோசை, இட்லி உள்பட எத்தனையோ உணவுகளை செய்கிறோம். அதேபோன்று உருவங்கள் பல இருந்தாலும் ஆன்மா ஒன்றுதான். இதை உணர்ந்ததால் தான் ராமானுஜர் சாதித்தார். என்னை படைத்த சக்திதான் மற்றவர்களையும் படைத்தது என்பதை அனைவரும் உணரவேண்டும். சமுதாயத்தில் ஒற்றுமை வளர இந்த உண்மையை உணரவேண்டும்.

    சமுதாயத்தில் அனைவரும் சமமானவர்கள் தான். எந்த வேதமும், சாஸ்திரங்களும் ‘உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள்’ என்று யாரையும் கூறவில்லை. நாம் அனைவரும் ராமானுஜரின் கொள்கையை பின்பற்ற வேண்டும்.

    வாழ்க்கையில் சந்தோ‌ஷம் வெற்றியடைய நாம் 3 செயல்களை கடைபிடிக்கவேண்டும். தினமும் 15 நிமிடங்களாவது தங்களுக்கு பிடித்த தெய்வத்தின் நாமத்தை நாம் உச்சரிக்கவேண்டும், இதற்கு நேரம் கிடைக்கவில்லை என்று யாரும் கூறக்கூடாது. டி.வி.யில் சீரியல் பார்ப்பதால் என்ன பயன். அதில் எந்த நன்மையும் கிடைப்பதில்லை. அதைவிட்டு தெய்வத்தின் நாமத்தை உச்சரியுங்கள்.

    அடுத்து நான் இன்று ஏதாவதொரு நன்மை செய்வேன் என்று உறுதி எடுத்துக்கொண்டு உங்களால் முடிந்த நன்மைகளை செய்யுங்கள். அடுத்து யாரையும் நான் கஷ்டப்படுத்தமாட்டேன், தெரிந்து தவறு செய்யமாட்டேன் என்று உறுதி எடுங்கள். இதை கடைபிடித்தால் வாழ்க்கையில் வெற்றியையும், சந்தோ‌ஷத்தையும் அடையலாம்.

    இந்த பிறவியில் நாம் செய்யும் பாவம், புண்ணியத்தின் அடிப்படையிலேயே அடுத்தபிறவி அமையும். எனவே அனைவரும் பிறருக்கு தீமை செய்யாமல் நல்லதை செய்யவேண்டும்.

    இவ்வாறு சக்தி அம்மா பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். மாநில கொள்கைபரப்பு செயலாளர் நா.சடகோபன் கலந்துகொண்டு பேசினார்.மாநாட்டில் விழாக்குழுவினர் மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×