search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயர்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியை ருசித்தது ஆப்கானிஸ்தான்
    X

    அயர்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியை ருசித்தது ஆப்கானிஸ்தான்

    டேராடூனில் நடைபெற்ற போட்டியில் அயர்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியை ருசித்துள்ளது ஆப்கானிஸ்தான். #AFGvIRE
    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி இந்தியாவில் உள்ள டேராடூனில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தானின் சிறப்பான பந்து வீச்சால் அயர்லாந்து முதல் இன்னிங்சில் 172 ரன்னில் சுருண்டது. கடைசி வீரராக களம் இறங்கிய முர்டாக் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் யாமின் அகமத்சாய், முகமது நபி ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ரஷித் கான், வக்கார் சலம்கெய்ல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    பின்னர் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் விளையாடியது. தொடக்க வீரர் முகமது ஷேசாத் 40 ரன்களும், ஹஷ்மதுல்லா ஷாஹிதி 61 ரன்களும், ஆஷ்கர் ஆப்கன் 67 ரன்களும் சேர்த்தனர். 3-வது வீரராக களம் இறங்கிய ரஹ்மத் ஷா 98 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தது. மூன்று வீரர்கள் அரைசதம் அடித்ததால் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 314 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

    142 ரன்கள் பின்தங்கிய நிலையில் அயர்லாந்து 2-வது இன்னிங்சில் விளையாடியது பால்பிரைன் 82 ரன்களும், ஓ'பிரைன் 56 ரன்களும் அடித்தனர். ஆனால் ரஷித் கான் அபாரமான வகையில் பந்து வீசி ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்ற அயர்லாந்து 2-வது இன்னிங்சில் 288 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ரஷித் கான் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்தார்.

    முதல் இன்னிங்சில் 142 ரன்கள் பின்தங்கியிருந்ததால் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 146 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றிருந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


    ரஹ்மத் ஷா

    147 ரன்கள் அடித்து முதல் டெஸ்ட் வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற வேட்கையில் ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்சில் களம் இறங்கியது. முகமது ஷேசாத் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க பேட்ஸ்மேன் இஹ்சானுல்லா ஆட்டமிழக்காமல் 65 ரன்களும், அடுத்த வந்த ரஹ்மத் ஷா 76 ரன்களும் அடித்தனர். இதனால் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் வெற்றியை ஆப்கானிஸ்தான் ருசித்துள்ளது.
    Next Story
    ×