search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிமியர் பேட்மிண்டன் லீக்: பெங்களூரு பிளாஸ்டர்சை வீழ்த்தியது சென்னை ஸ்மாஷர்ஸ்
    X

    பிரிமியர் பேட்மிண்டன் லீக்: பெங்களூரு பிளாஸ்டர்சை வீழ்த்தியது சென்னை ஸ்மாஷர்ஸ்

    பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடரின் முதல் நாள் ஆட்டத்தில் பெங்களூரு பிளாஸ்டர்சை 3-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி சென்னை ஸ்மாஷர்ஸ் அணி வெற்றி பெற்றது. #VodafonePBL #ChennaiSmashers #BengaluruBlasters
    சென்னை:

    3-வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டிகள் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இப்போட்டிகள் ஜனவரி 14-ந் தேதி வரை சென்னை, கவுகாத்தி, டெல்லி, லக்னோ, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடக்கிறது. இதில் சென்னை ஸ்மாஷர்ஸ், அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ், லக்னோ அவாதே வாரியர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், டெல்லி டாஷர்ஸ், ஐதராபாத் ஹன்டர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.



    நான்காவது சுற்று ஆட்டங்கள் சென்னை நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை ஸ்மாஷர்சும், பெங்களூரு பிளாஸ்டர்சும் மோதின.

    முதல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னையின் தனோங்சக் சீன்சோம்பூன்சக், பெங்களூரு அணியின் விக்டர் அலெக்சன் ஆகியோர் மோதினர். இதில் விக்டர் அலெக்சன், 15-11,6-15,15-9 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

    இரண்டாவது ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெங்களூருவின் சுபாங்கர் தேய், சென்னையின் பிரைஸ் லெவர்டெஸ் ஆகியோர் மோதினர். இதில் சுபாங்கர் தேய், 15-12, 15-12 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை அணியின் பி.வி.சிந்து, பெங்களூரு அணியின் கிறிஸ்டி கில்மவுரை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியை சென்னை அணி துருப்பு ஆட்டமாக தேர்ந்தெடுத்து விளையாடியது. இதில் 15-9,15-14 என்ற நேர் செட்களில் சிந்து வென்றார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் சென்னையின் சுமீத் ரெட்டி - லீ யங் ஜோடி, பெங்களூருவின் மத்தியாஸ் போவே - கிம் சா ரங் ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியை பெங்களூரு அணி துருப்பு ஆட்டமாக தேர்ந்தெடுத்தது. இதில் 8-15,15-14,15-13 என்ற செட்களில் சென்னை அணி வெற்றி பெற்றது.

    கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் சென்னையின் கிறிஸ் அட்காக் - பி.வி.சிந்து ஜோடி, பெங்களூரு அணியின் கிம் சா ரங் - சிக்கி ரெட்டி ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில் 15-14,15-11 என்ற நேர் செட்களில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

    நேற்றைய போட்டிகளின் பெங்களூரு அணி 5-ல் 3 போட்டிகளில் வெற்றி பெற்றது. இருப்பினும் முடிவில் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி வெற்றி பெற்றது. இன்று நடைபெறும் போட்டிகளில் மும்பை ராக்கெட்ஸ் - அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணிகள் விளையாட உள்ளன. #VodafonePBL #ChennaiSmashers #BengaluruBlasters
    Next Story
    ×