search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மான்செஸ்டர் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 380 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து
    X

    மான்செஸ்டர் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 380 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து

    மான்செஸ்டரில் நடைபெற்று வரும் 4-வது மற்றும் கடைசி டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 380 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.
    இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 362 ரன்கள் குவித்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் அதிகபட்சமாக 99 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆண்டர்சனின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா 226 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன் 4 விக்கெட்டும், பிராட் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    136 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

    நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. மொயின் அலி 67 ரன்னுடனும், பிராட் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.



    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பிராட் 5 ரன்னிலும், அடுத்து வந்த ஆண்டர்சன் 2 ரன்னிலும் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 243 ரன்னில் ஆல்அவுட் ஆனது. மொயீன் அலி 74 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மோர்கல் 4 விக்கெட்டும், ஆலிவியர் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இங்கிலாந்து 379 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 380 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.

    இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் நான்கு போட்டிகள் கொண்ட தொடரை 3-1 எனக் கைப்பற்றும். மாறாக தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் தொடரை 2-2 என சமன் செய்யும்.
    Next Story
    ×