search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் முதன்முறையாக தனித்தனியாக வாக்களித்தனர்
    X

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் முதன்முறையாக தனித்தனியாக வாக்களித்தனர்

    பீகார் மாநிலத்தில் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இதுவரை ஒரு அடையாள அட்டையுடன் வாக்களித்த நிலையில் முதன்முறையாக இன்று இருவரும் தனித்தனியாக வாக்களித்தனர்.
    பாட்னா:

    பீகார் மாநில தலைநகர் பாட்னாவை சேர்ந்தவர்கள் சபா மற்றும் பரா. பிறவியிலேயே தலைப்பகுதியில் ஒட்டிப்பிறந்த இவர்களுக்கு உடலும், உள்ளமும், எண்ணங்களும் வெவ்வேறாக இருந்தாலும் தேர்தல் கமிஷன் இவர்கள் இருவரையும் ஒருவராகவே கருதி ஒரே ஒரு வாக்காளர் அடையாள அட்டையை மட்டும் வழங்கி இருந்தது.

    கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற பீகார் மாநில சட்டசபை தேர்தலில் இருவரும் நடந்துவந்து ஒரு வாக்கை செலுத்தி இருந்தனர்.

    இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் தனித்தனியாக வாக்களர் அடையாள அட்டைகள் கிடைக்க பாட்னா நகர மாஜிஸ்திரேட் ஏற்பாடு செய்தார். இதைதொடர்ந்து தற்போது 23 வயதாகும் சபா மற்றும் பரா ஆகியோர் இரு அடையாள அட்டைகளுடன் இன்று தனித்தனியாக வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.



    ஒட்டிப் பிறந்த இவர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பதற்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மருத்துவர்கள் உள்பட பலர் செய்த பெருமுயற்சிகள் பலனளிக்கவில்லை. இவர்களின் துயரநிலையை அறிந்த சுப்ரீம் கோர்ட் இருவருக்கும் மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக அளிக்குமாறு முன்னர் பீகார் மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. தற்போது, அந்த தொகை 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.

    இரட்டை சகோதரிகளான சபாவும் பராவும் இந்தி நடிகர் சல்மான் கானின் தீவிர ரசிகைகள். வேகமாக காரை ஓட்டி ஒருவர் மீது ஏற்றிக் கொன்ற வழக்கில் சல்மான் கான் முன்னர் கைதானபோது இவர்கள் இருவரும் சோகத்தில் ஆழ்ந்திருந்ததும், சல்மான் கான் சிறையில் இருந்து விடுதலையானபோது இவர்கள் நோன்பு வைத்து நேர்த்திக்கடன் செலுத்தியதும் அப்போது ஊடகங்களில் வெளியானது.

    இதைதொடர்ந்து சல்மான் இவர்கள் இருவரையும் தனது செலவில் மும்பைக்கு வரவழைத்து சந்தித்து, கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×