search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி - ஆதரவு திரட்ட ஒடிசா முதல்வரை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
    X

    பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி - ஆதரவு திரட்ட ஒடிசா முதல்வரை சந்தித்தார் சந்திரசேகர ராவ்

    பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணிக்கு ஆதரவு திரட்டும் வகையில், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் இன்று சந்தித்தார். #ChandrasekharRao #NaveenPatnaik
    புவனேஷ்வர்:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சிகள் முன்னேற்பாடு பணிகளில் இறங்கி உள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றிமுகம் காட்டிய காங்கிரஸ், அதே வேகத்தோடு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. 5 மாநில தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் மீதும், ராகுல்காந்தி மீதும் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.
     
    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடும் நிலை உள்ளது.

    இதற்கிடையே, பா.ஜ.க அணியிலும், காங்கிரஸ் அணியிலும் சேராமல், மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து 3-வது அணி ஒன்றை அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் யோசனை தெரிவித்தார்.

    இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியையும் சந்தித்தார்.



    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்ட போதிலும், 3-வது அணி அமைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. பிராந்திய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் பா.ஜ.க மற்றும் காங்கிரசுக்கு எதிராக 3-வது அணி அமைத்து போட்டியிட்டால் அந்த அணியை மக்கள் ஆதரிப்பார்கள் என்று அவர் நம்புகிறார். இதுதொடர்பாக அவர் முக்கிய கட்சிகளின் தலைவர்களை சந்திக்க இருக்கிறார்.

    இந்நிலையில், தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் இன்று ஒடிசாவிற்கு சென்றார். தலைநகர் புவனேஷ்வரில் ஒடிசா முதல் மந்திரியை நேரில் சந்தித்தார். அவருக்கு நினைவு பரிசு அளித்தார். அப்போது மூன்றாவது அணி தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.

    இதையடுத்து, மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, உ.பி.யில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #ChandrasekharRao #NaveenPatnaik
    Next Story
    ×