search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் விமானம் வாங்க அனில் அம்பானிக்கு ரூ.21 ஆயிரம் கோடி கமிஷனாக கொடுக்கப்பட்டது - பிரசாந்த் பூஷன்
    X

    ரபேல் விமானம் வாங்க அனில் அம்பானிக்கு ரூ.21 ஆயிரம் கோடி கமிஷனாக கொடுக்கப்பட்டது - பிரசாந்த் பூஷன்

    ரபேல் போர் விமானம் வாங்குவதற்காக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.21 ஆயிரம் கோடி கமிஷனாக கொடுக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். #RafaelDeal #PrashantBhushan
    புதுடெல்லி :

    இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.59 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன. ஒரு ரபேல் விமானம் ரூ.560 கோடிக்கு வாங்க காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்தத்தை மாற்றி அதே விமானத்தை ரூ.1,600 கோடிக்கு வாங்குவதற்கு புதிய ஒப்பந்தத்தை பாரதிய ஜனதா ஆட்சியில் ஏற்படுத்தினார்கள். 

    ரபேல் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்யும் பிரான்ஸ் நிறுவனமான டஸ்சால்ட் நிறுவனத்துடன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து டஸ்சால்ட்-ரிலையன்ஸ் எனும் பெயரில் கூட்டாக பாதுகாப்பு தளவாடங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. 

    எனவே, அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு சாதகமாக மத்திய அரசு ரபேல் ஒப்பந்தத்தை மாற்றி அமைத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். 

    இந்நிலையில், ரபேல் விமானம் வாங்குவதில் கற்பனைக்கு எட்டாத வகையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றம் சாட்டியுள்ளார். 

    இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    ரபேல் விமானம் வாங்குவதில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஆதாயம் அடையும் வகையில் தேசத்தின் பாதுகாப்பில் ஆளும் பா.ஜ.க அரசு சமரசம் செய்துள்ளது. 

    ராஜீவ் காந்தி ஆட்சியில் போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. ஒரு பீரங்கிக்கு 4 சதவிகிதம் கமிஷன் எனும் அடிப்படையில் அதில் ரூ.64 கோடி ஊழல் நடைபெற்றது. 

    ஆனால், ரபேல் போர் விமானம் வாங்கிய விவகாரத்தில் கற்பனைக்கு எட்டாத வகையில் ஊழல் நடைபெற்றுள்ளது. இதில் கமிஷனாக ஒரு விமானத்திற்கு 30 சதவிகதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, ரபேல் கொள்முதலில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கமிஷனாக மட்டுமே ரூ.21 ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. 



    முதலில் 126 விமானம் வாங்குவதாக இருந்த நிலையில், பின்னர் அதன் எண்ணிக்கை 36 ஆக குறைக்கப்பட்டது. விமானத்துடன் அதன் தொழில்நுட்பங்களும் இந்தியாவுடன் பறிமாறிக்கொள்வதாக இருந்தது. இப்போது, தொழில்நுட்ப பறிமாற்றம் புதிய ஒப்பந்தத்தில் இருந்து மாயமாகியுள்ளது ஏன்?. இவ்விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என காங்கிரஸ் வைக்கும் கோரிக்கையில் நியாயம் உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #RafaelDeal #PrashantBhushan
    Next Story
    ×