search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? பொருளாதார நிபுணர்கள் கருத்து
    X

    ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? பொருளாதார நிபுணர்கள் கருத்து

    இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #RupeeAllTimeLow
    புதுடெல்லி:

    இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 57 காசுகளாக சரிந்து உள்ளது. வரலாறு காணாத இந்த வீழ்ச்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் தாக்கம் நாட்டின் பொருளாதாரத்திலும், பங்கு சந்தையிலும் எதிரொலித்தது. இறக்குமதி நடவடிக்கைகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதே நிலை நீடித்தால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிக அளவில் உயர வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது தவிர, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையிலும் இது பெரும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். ஏற்று மதியை விட இறக்குமதி அதிகரித்தால் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

    தவறான பொருளாதார கொள்கை, வர்த்தக நடவடிக்கைகள் காரணமாகவே ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது என்றும் கருத்துக்கள் உள்ளன. எதிர்க்கட்சிகளும் இந்த காரணத்தை கூறி மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றன.

    இது குறித்து மத்திய நிதி அமைச்சக உயர் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

    சர்வதேச நாடுகள் இடையே வர்த்தகத்தில் கடும் போட்டி உள்ளது. இது ஒரு காரணம். இதற்கிடையே கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதும் மிக முக்கிய காரணமாகும்.

    இந்தியாவின் எரிபொருள் தேவையில் 81 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யும் நாடுகளின் தேவைக்கு ஏற்ப எண்ணையை அந்த நாடுகள் உற்பத்தி செய்வதில்லை.

    இந்த காரணங்கள் அனைத்தும் உலக அளவில் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதன் அடிப்படையிலேயே, இந்தியாவில் ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. விரைவிலேயே ரூபாய் மதிப்பு ஸ்திரமான நிலையை எட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RupeeAllTimeLow
    Next Story
    ×