search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகா மந்திரி மகேஷ், நிர்மலா சீதாராமன் இடையே வாக்குவாதம் - துரதிஷ்டவசமானது என பாதுகாப்புத்துறை அறிக்கை
    X

    கர்நாடகா மந்திரி மகேஷ், நிர்மலா சீதாராமன் இடையே வாக்குவாதம் - துரதிஷ்டவசமானது என பாதுகாப்புத்துறை அறிக்கை

    கர்நாடக மந்திரி மகேஷ் மற்றும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இடையே நடைபெற்ற வாக்குவாதம் துரதிஷ்டவசமானது என பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. #NirmalaSitharaman
    புதுடெல்லி :

    கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக மடிக்கேரி, குஷால் நகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இதனால் பொதுமக்கள் மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    குடகு மாவட்ட வெள்ளச்சேதங்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கார் மூலம் பயணித்து பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

    பின்னர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களை சந்தித்து நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது கர்நாடக மந்திரி ச.ரா.மகேஷ் என்பவர் இடைமறித்து நமக்கு நேரமில்லை, நாம் உடனே அதிகாரிகளைச் சந்திக்க வேண்டும் எனவே இந்தச் சந்திப்பு போதும் என்று கூறினார்.



    அதைத்தொடர்ந்து, நிர்மலா சீத்தாராமன், தனது பயணம் மாவட்ட நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்டது. நான் தாமதம் செய்யவில்லை என்றார். மத்திய மந்திரி ஒருவர் பொறுப்பு அமைச்சர் ஒருவரின் அறிவுறுத்தலுக்கு இணங்கி நடக்க வேண்டியுள்ளது நம்பமுடியவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

    இதற்கு உடனடியாக கர்நாடக துணை முதல்வர் பரமேஷ்வரா பதிலடி கொடுத்தார். ‘என்னுடைய மந்திரி சபை சகாவிடம் நீங்கள் கடுமையாக பேசியது ஏமாற்றம் அளிக்கிறது. குடகில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எங்கள் மந்திரிகள் இரண்டு வாரமாக வெள்ள நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றனர். நீங்கள் செய்யும் உதவிக்காக நாங்கள் எவ்வளவு மதிப்பு கொடுக்கிறோமோ அதே மரியாதையை நீங்களும் அளிக்க வேண்டும்’ என அவர் தந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

    இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சகம் கர்நாடக மந்திரி மகேஷ் மற்றும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இடையே நடைபெற்ற வாக்குவாதம் துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ளது.

    அதில், நிர்மலா சீதாராமனின் பயணத் திட்டம் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மாவட்ட நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்டது. இடையில் முன்னாள் ராணுவ வீரர்களை சந்தித்து பேச வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அந்த சந்திப்பு நடைபெற்றது.

    ஆனால், அந்த சந்திப்பை நிறுத்த சொல்லி கர்நாடக மந்திரி குறுக்கிட்ட சம்பவம் துரதிஷ்டவசமானது. நிலைமை மோசமாகிவிட கூடாது என்ற காரணத்தால் அந்த சந்திப்பை பாதுகாப்பு மந்திரி உடனடியாக ரத்து செய்துவிட்டார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #NirmalaSitharaman
    Next Story
    ×