search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றவர் கைது
    X

    திருப்பதியில் சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றவர் கைது

    திருப்பதியில் சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றவர் கைது

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறது.

    தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு ஆன்லைன் குலுக்கல் முறையில் மட்டுமே டிக்கெட்டு ஒதுக்கீடு நடைபெறும். முன் பதிவு செய்த பக்தர்கள் டிக்கெட் ஒதுக்கீடு நடந்த பின் டிக்கெட்டுக்கு உரிய பணத்தை செலுத்த வேண்டும்.

    இந்நிலையில் மகா ராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் பகுதியில் இருக்கும் பக்தர்களுக்கு அதிக அளவில் சுப்ரபாத சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைப்பதை கண்டுபிடித்த தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது சோலாப்பூரை சேர்ந்த பிரபாகர் ராவ் என்பவர் போலியான இ-மெயில் ஐடிகள், போலி ஆதார் அட்டைகளை பயன் படுத்தி இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருப்பது தெரியவந்தது.

    மேலும் 120 ரூபாய் விலை உள்ள ஒவ்வொரு சுப்ரபாத சேவை டிக்கெட்டையும் தலா ஆயிரம் ரூபாய்க்கு பக்தர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    நேற்று காலை சுப்ரபாத சேவைக்காக பக்தர்கள் சென்று கொண்டிருந்த போது அவர்கள் வைத்திருந்த டிக்கெட்டுகளை வாங்கி விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவை சோலாப்பூர் பிரபாகர் ராவ் விற்பனை செய்த டிக்கெட்டுகள் என்பது தெரிய வந்தது.

    அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சோலாப்பூர் போலீசார் பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரை திருப்பதிக்கு அழைத்து வந்து விசாரனை நடத்த தேவஸ்தான விஜிலென்ஸ் துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×