search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா வெள்ள மீட்பு பணியில் கோவை ராணுவ வீரர்கள்
    X

    கேரளா வெள்ள மீட்பு பணியில் கோவை ராணுவ வீரர்கள்

    கேரளாவில் செருதோணி பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க கோவையில் இருந்து 50 ராணுவ வீரர்கள் இன்று காலை சென்றனர். அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். #KeralaFloods #KeralaRains
    கொழிஞ்சாம்பாறை:

    கேரளாவில் கடந்த 10 நாட்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதிலும் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணைகள் அனைத்தும் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி திறந்து விடப்பட்டன.

    நேற்று இடுக்கி மாவட்டம் செருதோணி அணையை திறந்துவிட அரசு முடிவு செய்தது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய்ந்து அணையில் உள்ள 5 ‌ஷட்டர்களும் திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது.

    இதனால் பெரியார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு செருதோணி நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. சிருதோணி பஸ் நிலையம் அடித்துச்செல்லப்பட்டது. இந்த வெள்ளம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா வரை சென்றது. அந்த நகரைத்தையும் மூழ்கடித்தது. நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

    செருதோணி, ஆலுவா நகரில் 1000 ஆயிரம் வீடுகள் தண்ணீரில் தத்தளிக்கிறது. 10 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெரியார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 3 ஆயிரம் குடும்பத்தினர் மாற்று இடத்திற்கு சென்றுவிட்டனர்.

    பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 55 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முல்லைபெரியார் அணை 136 அடி வரை உயர்ந்து விட்டது. இதனால் எந்த நேரத்திலும் திறந்து விடப்படலாம்.

    கேரளாவில் வெள்ளப்பெருக்கால் 500 கி.மீட்டர் தூரத்திற்கு சாலை அடித்து சென்றது. 15 பாலங்கள் மீண்டும் உபயோகப்படுத்த முடியாத நிலையில் சிதைந்து விட்டது. பொதுமக்களை மீட்க ராணுவம் மற்றும் போலீசார் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    செருதோணி பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க கோவையில் இருந்து 50 ராணுவ வீரர்கள் இன்று காலை சென்றனர். அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கேரளா முழுவதும் இதுவரை மழைக்கு 32 பேர் பலியாகியுள்ளனர். 7 பேரை காணவில்லை. மலப்புரம் மாவட்டம் எடக்கரையில் ஏற்பட்பட்ட மண்சரிவில் வீடு இடிந்து சுப்பிரமணியன் (வயது 36). இவரது மனைவி கீதா (30). கீதாவின் தாய் குஞ்சி (60). சுப்பிரமணியனின் மகன்கள் நவநீத் (7), அபித் (5). உறவினர் மிதுன் (17) ஆகியோர் சிக்கினர். இதில் சுப்பிரமணியின் உடலை தவிர மற்றவர்களின் உடலை போலீசார் மீட்டனர். திங்கட்கிழமை வரை மழை நீடிக்கும் என்று வானிலை அறிக்கை கூறுவதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

    கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அளவுக்கு மழை பெய்தது. அதன்பின்னர் தற்போது தான் அதிக மழை பெய்துள்ளது என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. #KeralaFloods #KeralaRains


    Next Story
    ×