search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் ராகுல் காந்தி எனக்கு தெளிவான பதிலளிக்கவில்லை - அமித் ஷா
    X

    தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் ராகுல் காந்தி எனக்கு தெளிவான பதிலளிக்கவில்லை - அமித் ஷா

    அசாம் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் தாம் எழுப்பிய கேள்விக்கு ராகுல் காந்தி தெளிவான பதிலளிக்கவில்லை என பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #NRC
    புதுடெல்லி :

    வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

    அதன் இறுதி வரைவு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    40 லட்சம் பேர் பதிவேட்டில்  சேர்க்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இவர்கள் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள். இதற்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து இந்திய அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இது குறித்து பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளதாவது :-

    சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படியே அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

    ஆனால், இதை செயல்படுத்தக்கூடாது என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடும் அவ்வாறாகவே உள்ளது. 

    வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவியவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமா? வேண்டாமா? எனும் கேள்வியை ராகுல் காந்தியிடம் கேட்டேன்.

    ஆனால், இதுவரை அவர் எனக்கு தெளிவான பதில் அளிக்கவில்லை. எனினும், இவ்விவகாரத்தில் ராகுல் காந்தியின் நிலைப்பாடு என்ன என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

    காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சாமாஜ் கட்சிகளிடம், சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்காளதேசத்தினரை இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க வேண்டுமா? அல்லது நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமா? எனும் கேள்வியை கேட்க விரும்புகிறேன். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    Next Story
    ×