search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசாமில் நுழைய தடை - விடிய விடிய காத்திருந்து ஊர் திரும்பிய திரிணாமுல் காங். குழுவினர்
    X

    அசாமில் நுழைய தடை - விடிய விடிய காத்திருந்து ஊர் திரும்பிய திரிணாமுல் காங். குழுவினர்

    அசாமின் சில்சார் விமான நிலையத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் குழுவினர் இன்று தங்கள் மாநிலத்திற்கு திரும்பினர். #NRCIssue #SilcharAirport #TMCDelegation
    சில்சார்:

    வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் இறுதி வரைவு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டனர். சுமார் 40 லட்சம் பேர் இந்த பதிவேட்டில் விடுபட்டுள்ளனர். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு, உள்நாட்டு போருக்கு வழிவகுக்கும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக ஆட்சேபம் தெரிவித்திருந்தார். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் நடவடிக்கைகளை அசாம் மாநில போலீசார் உன்னிப்பாக கவனித்து வந்தனர்.

    இந்நிலையில், அசாம் மாநிலத்தில் என்ஆர்சி பட்டியல் வெளியான பிறகு உள்ள நிலைமையை ஆய்வு செய்வதற்காக திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 8 பேர் வந்தனர். அவர்கள் அனைவரும் சில்சார் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். விமான நிலையத்திலேயே அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், திரிணாமுல் காங்கிரஸ் குழுவினரை தடுத்து நிறுத்தியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.



    அசாம் மாநிலத்திற்குள் நுழைவதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் இரவு முழுவதும் விமான நிலையத்திலேயே தங்கியிருந்தனர். அவர்களில் 6 பேர் இன்று காலை அசாமிலிருந்து புறப்பட்டனர். எம்.பி.க்கள் மம்தாபால தாகூர், அர்பிதா கோஷ் ஆகியோர் பின்னர் புறப்பட்டுச் செல்வார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் குழுவினர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதை ‘சூப்பர் எமர்ஜென்சி’ என மம்தா பானர்ஜி விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.  #NRCIssue #SilcharAirport #TMCDelegation

    Next Story
    ×