search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலைகளில் ஓடும் பாலாறு - மகாராஷ்டிராவில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
    X

    சாலைகளில் ஓடும் பாலாறு - மகாராஷ்டிராவில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

    மகாராஷ்டிராவில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி டேங்கர் லாரிகளை வழிமறித்து பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் கோலாப்பூர், சங்லி, சட்டாரா, புனே ஆகிய மாவட்டங்களில் அம்மாநிலத்தின் மேற்கு பகுதியில் மக்களுக்கு தேவையான பால் உற்பத்தி நடைபெறுகிறது. இதுதவிர, அஹமத்நகர், நாசிக், ஜலகோன், நாண்டெட் மற்றும் பர்பானி மாவட்ட மக்களும் கறவை மாடு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியை முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர்.

    பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பால் 17 ரூபாய்க்கு தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. பின்னர், பதப்படுத்தி, குளிரூட்டி பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பால் 42 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த கொள்ளை லாபத்தை சுட்டிக் காட்டிய பால் உற்பத்தியாளர்கள், கொள்முதல் விலையில் லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயரத்தி தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பால் உற்பத்தியாளர்களிடம் அரசுசார்ந்த கூட்டுறவு நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கான விலையை உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கங்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

    அவர்களது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காததால் புனே மற்றும் மும்பை மாவட்டங்களில் இன்று முதல் பால் சப்ளையை நிறுத்த போராட்டக்காரர்கள் தீர்மானித்தனர். இதனால், தினந்தோறும் 55 லட்சம் பால் பாக்கெட்கள் விற்பனையாகும் மும்பையில் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே, தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு பால் பாக்கெட்களை கொண்டுசென்ற தனியார் வாகனங்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி, பால் பாக்கெட்களை அழித்தனர். மேலும், மும்பை - புனே நெடுஞ்சாலை வழியாக சென்ற பால் டேங்கர் லாரிகளையும் வழிமறித்து, பால் முழுவதையும் சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



    போராட்டக்காரர்கள் கூடியிருந்த மலேகான் பகுதியில் பால் ஏற்றிச் சென்ற தனியார் பால் பண்ணை வாகனம் இன்று தீயிட்டு கொளுத்தப்பட்டது. அந்த வாகனத்தின் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    பால் உற்பத்தியாளர்களின் இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கும் சுவாபிமானி ஷேட்கரி சங்காத்னா தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராஜு ஷெட்டி, ‘அரசின் பாராமுகத்தால் இந்த போராட்டத்தை நடத்தும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம்.



    பாலை வீணாக சாலைகளில் கொட்டி அழிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி கிடையாது. ஆனால், இந்த அரசு பால் பண்ணை முதலாளிகளை பாதுகாப்பதில்தான் அக்கறை காட்டுகிறது. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை நிராகரித்து வருகிறது. எனவே, அரசுக்கு எங்களது எதிர்ப்பை பதிவு செய்ய இதை தவிர வேறுவழி ஏதும் தெரியவில்லை என குறிப்பிட்டார்.

    பால் உற்பத்தியாளர்களின் இந்த போராட்டத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ள மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மாநிலம் முழுவதும் தட்டுப்பாடு இல்லாமல் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பால் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்த அரசு தயாராகவே உள்ளது.

    மாநிலத்தில் சுமார் 40 சதவீதம் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. 60 சதவீதம் பதிவு செய்யப்படவில்லை. எனவே, நேரடி பணப்பரிமாற்றம் முறை ஊழலுக்கு வழி வகுத்துவிடும் என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×