search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஸ்கரில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு நூதன தண்டனை
    X

    சத்தீஸ்கரில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு நூதன தண்டனை

    சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்டத்தில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு நூதன தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்டத்தில் மலைவாழ் இன மக்கள் மெஜாரிட்டி ஆக உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு குக்கிராமத்தில் மலைவாழ் இனத்தைசேர்ந்த 3 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டனர்.

    அவர்களில் 2 பேர் அக்காள்-தங்கை ஆவர். இவர்களது தந்தை, இது குறித்து போலீசில் புகார் செய்தார். அதை தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.

    அதை அறிந்த குற்றவாளிகள் குடும்பத்தினர் கிராமத்தில் உள்ள கட்டப்பஞ்சாயத்து குழுவை நாடினர். அவர்கள் கற்பழிக்கப்பட்ட சிறுமியின் தந்தையை அணுகி போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெறும் படி வலியுறுத்தினர். பஞ்சாயத்தில் பேசி சரி செய்து கொள்ளலாம் என்றனர். எனவே அவர் புகாரை வாபஸ் பெற்றார். அதைதொடர்ந்து கட்டப்பஞ்சாயத்து நடந்தது.

    அதில் கற்பழித்த 3 குற்றவாளிகளும் பஞ்சாயத்தில் மன்னிப்பு கேட்கவும், தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது. மேலும் குற்றவாளிகள் சார்பில் கிராம மக்களுக்கு கறி சாப்பாட்டுடன் விருந்து வைக்கவும் வலியுறுத்தப்பட்டது.

    அதை தொடர்ந்து அந்த கிராமத்தில் தடபுடலாக கறி சாப்பாட்டுடன் விருந்து வைக்கப்பட்டது. அதில் கிராமத்தில் உள்ள 45 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அந்த கிராமத்தில் வாழும் 45 குடும்பத்தினரும் கற்பழிப்பு குற்றவாளிகளிடம் இருந்து அபராதமாக பெற்ற பணத்தில் இருந்து தலா ரூ.485 பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றனர். ஆனால் அதைப் பார்த்த சிறுமிகளின் குடும்பத்தினர் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.

    இதற்கிடையே கற்பழிக்கப்பட்ட ஒரு சிறுமியின் தந்தைக்கு கட்டப்பஞ்சாயத்து குழுவின் நடவடிக்கை பிடிக்கவில்லை. பத்திரிகை மற்றும் டி.வி.க்கு இது குறித்து பேட்டி அளித்தார். அதை தொடர்ந்து இந்த தகவல் வெளியே தெரிய வந்தது.

    போலீசார் வழக்குபதிவு செய்தனர். சம்பவம் நடந்த கிராமத்துக்கு போலீஸ் குழு சென்றது. அங்கு கற்பழிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அவர்களது பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கற்பழிப்பு சம்பவம் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தால் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும் என ஜஸ்பூர் கூடுதல் சூப்பிரண்டு உனேசா கந்தூன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×