search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான நடிகை சூர்யா மற்றும் அவரது தாயாரும், சகோதரி.
    X
    கைதான நடிகை சூர்யா மற்றும் அவரது தாயாரும், சகோதரி.

    தமிழகத்திலும் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட நடிகை - போலீஸ் விசாரணையில் தகவல்

    கேரளாவில் கள்ளநோட்டுகளை அச்சடித்ததாக கைது செய்யப்பட்ட டி.வி. நடிகை சூர்யா கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் கள்ள நோட்டுகளை பல லட்சம் அளவுக்கு புழக்கத்தில் விட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அரணக்கரை என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது கள்ளநோட்டுகளுடன் 3 பேர் கும்பல் சிக்கியது.

    அவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக ரூ.200 கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த கும்பலிடம் விசாரணை நடத்தியபோது கொல்லம் பகுதியைச் சேர்ந்த டி.வி. நடிகை சூர்யாவுக்கு இதில் தொடர்பு இருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியானது.

    நடிகை சூர்யா கொல்லம் பகுதியில் ஒரு சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்து அங்கு கள்ளரூபாய் நோட்டுகள் அச்சடித்து சப்ளை செய்வதாக அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து போலீசார் அந்த நடிகையின் வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அங்கு நவீன எந்திரங்கள் மூலம் பல லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நடிகை சூர்யா அவரது தாயார் ரமாதேவி, சகோதரி சுருதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் வயநாட்டைச் சேர்ந்த பிஜூ என்பவர் இந்த கள்ளநோட்டு கும்பலின் தலைவனாக செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

    இவர் தான் நடிகை சூர்யாவுக்கு கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். நடிகை கள்ளரூபாய் நோட்டுகளை அச்சடித்து அந்த கும்பல் மூலம் சப்ளை செய்து உள்ளார்.

    இவர்கள் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் கள்ள நோட்டுகளை பல லட்சம் அளவுக்கு புழக்கத்தில் விட்டுள்ளனர். ஆந்திரா, கர்நாடகாவிலும் இந்த கும்பல் கள்ள ரூபாய் நோட்டுகளை சப்ளை செய்து உள்ளது. ரூ.1 லட்சம் பணத்தை பெற்று கொண்டு அதற்கு பதிலாக 3 மடங்கு கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்து உள்ளனர். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நடிகை இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த கும்பலின் மூளையாக செயல்பட்ட பிஜூ தற்போது தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர் கைதானால் தமிழகத்தில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட உதவி செய்தது யார்? யார்? என்பது தெரிய வரும்.

    Next Story
    ×