search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா போன்ற பெரிய நாட்டில் கற்பழிப்பு குற்றங்களை தடுக்க முடியாது - மத்திய மந்திரி கருத்தால் சர்ச்சை
    X

    இந்தியா போன்ற பெரிய நாட்டில் கற்பழிப்பு குற்றங்களை தடுக்க முடியாது - மத்திய மந்திரி கருத்தால் சர்ச்சை

    இந்தியா பெரிய நாடு என்பதால் கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க முடியாது என மத்திய மந்திரி சந்தோஷ்குமார் கங்வார் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    பரேலி:

    காஷ்மீர் மாநிலம் கதுவா, உத்தரபிரதேச மாநிலம் உன்னாவோ ஆகிய இடங்களில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    கதுவா கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவத்தில் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து காஷ்மீரில் பா.ஜனதா பேரணி நடத்தியது. இதில் 2 மந்திரிகள் பங்கேற்றது சர்ச்சை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பா.ஜனதா மந்திரிகள் 2 பேர் பதவி விலகினர்.

    இதேபோல உன்னாவோ சிறுமி கற்பழிப்பு சம்பவத்தில் அவரது தந்தை மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இது தொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ. கைதானார்.

    சிறுமிகள் கற்பழிப்பு தொடர்பாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில் கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க முடியாது. ஒரு சில சம்பவங்கள் நடைபெறத்தான் செய்யும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை மந்திரி சந்தோஷ்குமார் கங்வார் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



    பாலியல் பலாத்கார சம்பவங்கள் மிகவும் துரதிருஷ்டவசமானது. சில நேரங்களில் நம்மால் அவற்றை தடுக்க முடியாமல் போய்விடுகிறது. இது போன்ற குற்றங்களுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்தியா போன்ற பெரிய நாட்டில் இது போன்ற ஓரிரு பாலியல் பலாத்கார சம்பவங்கள் நிகழவே செய்யும். எனவே இது தொடர்பாக தேவையற்ற பரபரப்பையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்த வேண்டாம். இது போன்று செய்வது சரியானது அல்ல. அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுதான் வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியா பெரிய நாடு என்பதால் பலாத்கார சம்பவங்களை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது போன்று மத்திய மந்திரி கருத்து தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் மத்திய மந்திரி கங்வார் டுவிட்டரில் விளக்கம் அளித்து உள்ளார்.

    அதில் “பிரச்சினையை திசை திருப்பும் வகையில் ஊடகங்களிடம் நான் கருத்து கூறவில்லை. இது மிகவும் முக்கியமான பிரச்சினை. நாம் பொறுப்புடன் கையாள வேண்டும் என்ற அர்த்தத்தில் கருத்து தெரிவித்தேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டில் உள்ள பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும்“ என்று தெரிவித்துள்ளார். #asifa_unnao #SantoshGangwar
    Next Story
    ×