search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘சீனாவை விட எவ்வளவோ மேலாக உள்ளது’ - இந்தியாவுக்கு டிரம்ப் மகன் புகழாரம்
    X

    ‘சீனாவை விட எவ்வளவோ மேலாக உள்ளது’ - இந்தியாவுக்கு டிரம்ப் மகன் புகழாரம்

    சீனாவை விட இந்தியா எவ்வளவோ மேலாக உள்ளதாகவும், மக்களின் மனோபாவம் ஒரே மாதிரி உள்ளதாகவும் டிரம்பின் மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    அமெரிக்காவில் கொடி கட்டிப்பறக்கும் ஜனாதிபதி டிரம்ப் குடும்பத்தாரின் ‘டிரம்ப் டவர்ஸ்’ நிறுவனம், இந்தியாவிலும் பன்னடுக்கு மாடி சொகுசு வீடுகளை கட்டி விற்பனை செய்வதில் ஈடுபட்டு உள்ளது. தற்போது அரியானா மாநிலம் குருகிராமில் 47 மாடிகள் கொண்ட இரட்டை கோபுர குடியிருப்பு ஒன்றை (254 வீடுகள்) இந்த நிறுவனம் கட்டி விற்கிறது. மிகவும் ஆடம்பரமாக கட்டப்படுகிற இந்த வீடுகள் தலா ரூ.5½ கோடியில் இருந்து ரூ.11 கோடி வரையிலான விலையில் விற்கப்படும். இதன் விற்பனையை ஊக்குவிப்பதற்காக டிரம்பின் மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் ஒரு வார பயணமாக இந்தியா வந்து உள்ளார்.

    டெல்லியில் நேற்று அவர் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், “சீனாவை விட்டு விட்டு இந்தியாவில் அதிநவீன சொகுசு அடுக்கு மாடி வீடுகளை கட்டுவதின் காரணம் என்ன?” என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு டொனால்டு டிரம்ப் ஜூனியர், “ஒரு தொழில் அதிபராக நான் பார்க்கிறபோது, சீனாவை விட இந்தியா எவ்வளவோ மேலாக உள்ளது. மக்களின் மனோபாவம் ஒரே மாதிரி உள்ளது. நேர்மையும் கொஞ்சம் அதிகமாகவே இருப்பதாக கருதுகிறேன்” என்று பதில் அளித்தார்.

    தொடர்ந்து அவர் கூறும்போது, “நான் இங்கு புதிதாக வந்தவன் அல்ல. கடந்த 10 ஆண்டுகளாக இங்கே மாற்றத்தை கண்டு வருகிறேன். இங்கே சீர்திருத்தங்கள் நடைபெறுகின்றன. இது மிகவும் சாதகமான தேசம்” என புகழ்ந்தார். 
    Next Story
    ×