search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பையில் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களுடன் மாயமான ஹெலிகாப்டரில் பயணம் செய்த மேலும் 2 பேரின் உடல் மீட்பு
    X

    மும்பையில் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களுடன் மாயமான ஹெலிகாப்டரில் பயணம் செய்த மேலும் 2 பேரின் உடல் மீட்பு

    மும்பையில் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களுடன் மாயமான ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மேலும் 2 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. #Mumbaihelicoptermissing #ONGCworkers
    மும்பை:

    மும்பையின் ஜூஹூ விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10.20 மணியளவில் பவன் ஹன்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. அதில் ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் 5 பேர் மற்றும் இரண்டு பைலட்டுகள் பயணம் செய்தனர்.

    ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான எண்ணெய் கிணறுக்கு அந்த ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. ஆனால், குறித்த நேரத்திற்குள் எண்ணெய்க் கிணறு உள்ள பகுதியில் தரையிறங்கவில்லை.

    கடைசியாக 10.30 மணியளவில் எண்ணெய் கிணற்றில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலகத்துடன் ஹெலிகாப்டர் தொடர்பில் இருந்துள்ளது. அதன்பின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

    இதையடுத்து, கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் அந்த ஹெலிகாப்டரின் பாகங்கள் கடல்பகுதியில் சிதறி கிடப்பதை கண்டுபிடித்தனர். அப்பகுதியில் தீவிரமாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த மூன்று பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன.

    இந்நிலையில், கடலோர காவல் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடல் பகுதியில் இருந்து மேலும் 2 பேரின்  உடல்களை மீட்டுள்ளோம். இன்னும் காணாமல் போன மற்ற இரண்டு பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றனர்.

    ஹெலிகாப்டர் விபத்து குறித்து அறிந்த விமான போக்குவரத்து துறை மந்திரி ஜெயந்த் சின்ஹா டுவிட்டரில் பதிவிடுகையில், விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #Mumbaihelicoptermissing #ONGCworkers #tamilnews
    Next Story
    ×