search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு
    X

    தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு

    தமிழ் பெண்களை இழிவுபடுத்தியது தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் மந்திரி எம்.எம். மணிக்கு எதிராக கேரளாவை சேர்ந்தவர் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
    கொச்சி:

    கேரள மின்துறை மந்திரி எம்.எம். மணி, அங்கு இடுக்கி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, தொழிலாளர்கள் உரிமைகளுக்காக போராடிய தமிழ் பெண்களை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த விவகாரம் கேரள சட்டசபையில் நேற்று புயலை கிளப்பியது. அவர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

    இந்த நிலையில் கேரள ஐகோர்ட்டில் மந்திரி எம்.எம். மணிக்கு எதிராக கேரளாவை சேர்ந்த ஜார்ஜ் வட்டுகுளம் என்பவர் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தில் ஈடுபட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை பேசக்கூடாத, ஆபாச வார்த்தைகளால் அவதூறாக பேசி உள்ளார். இதேபோன்று அவர் பைனாவு அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் பெண் முதல்வரையும் அவதூறாக பேசினார். பின்னர் அவர் மன்னிப்பு கேட்டார். இப்படி பேசுவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். அவர் மீது கோர்ட்டு மேற்பார்வையின்கீழ் விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இந்த விவகாரத்தில் மந்திரி எம்.எம். மணி பதவி விலக வலியுறுத்தி மூணாறில் 2 பெண்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

    மந்திரி எம்.எம். மணி மன்னிப்பு கேட்பதுடன், பதவி விலகும்வரையில் எங்களது போராட்டம் தொடரும் என உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள பெண்களில் ஒருவரான கோமதி கூறினார். 
    Next Story
    ×