search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயோத்தி பிரச்சனைக்காக எந்த தண்டனையையும் ஏற்க தயார்: உமா பாரதி ஆவேசம்
    X

    அயோத்தி பிரச்சனைக்காக எந்த தண்டனையையும் ஏற்க தயார்: உமா பாரதி ஆவேசம்

    அயோத்தி பிரச்சனைக்காக எவ்வித தண்டனையையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக மத்திய நீர்வளத்துறை மந்திரி உமா பாரதி இன்று குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் இருந்த பாபர் மசூதி கடந்த 6-12-1992 அன்று இடிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக இரு வகையிலான வழக்குகள் தனித்தனி கோர்ட்டுகளில் நடைபெற்று வருகின்றன.

    அதாவது பெயர் குறிப்பிடாத கரசேவகர்களுக்கு எதிரான வழக்கு லக்னோ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. பா. ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட மிகவும் முக்கிய பிரமுகர்களுக்கு எதிரான வழக்குகள் ரேபரேலியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அத்வானி, முரளிமனோகர் ஜோஷி,  உமா பாரதி உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த குற்றச்சதி வழக்கை ரேபரேலி கோர்ட்டு ரத்து செய்தது. அலகாபாத் ஐகோர்ட்டும் இதை உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ.யும், ஹாஜி மகபூப் அகமது என்பவரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.சி. கோஷ், ஆர்.எல். நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது.

    பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.


    பாபர் மசூதி இடிப்பின் போது உத்தரபிரதேசம் முதல்-மந்திரியாக இருந்த கல்யாண்சிங், தற்போது ராஜஸ்தான் மாநில கவர்னராக பதவி வகித்து வருகிறார். எனவே, நடவடிக்கை விலக்கு உரிமையின்கீழ், அவர் கவர்னர் பதவியை நிறைவு செய்யும்வரை இந்த வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதிக்கு எதிரான இந்த வழக்கை காலதாமதமின்றி 4 வாரத்துக்குள் தொடங்க வேண்டும் என்றும், இவ்வழக்கை அன்றாடம் விசாரித்து, 2 ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்றும் லக்னோ கோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

    மேலும் இரண்டு வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்றும், வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளை இடமாற்றம் செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதியாக பா.ஜனதா சார்பில் எல்.கே.அத்வானியை வேட்பாளராக நிறுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் இன்றைய உத்தரவு அத்வானிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையில், டெல்லியில் இன்று பிற்பகல் மத்திய மந்திரி உமா பாரதியை சந்தித்த செய்தியாளர்கள் சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவு தொடர்பாக அவரது கருத்தை கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர் அயோத்தி பிரச்சனைக்காக எந்த தண்டனையையும் ஏற்க தயார் என்று குறிப்பிட்டார்.

    முன்னர், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நடைபெற்ற இயக்கத்தில் நானும் ஒரு அங்கமாக பங்கேற்றதை எண்ணி பெருமைப்படுகிறேன். இதற்காக மன்னிப்பு கேட்கவோ, வருத்தப்படவோ தயாராக இல்லை என்ற நிலைப்பாட்டில் நான் எப்போதுமே உறுதியாக இருந்து வந்துள்ளேன்.

    அயோத்தியில் ராமர் கோயில் அமைவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று குறிப்பிட்ட உமா பாரதி, இந்த விவகாரத்தில் சதித்திட்டம் ஏதுமில்லை, எல்லா விவகாரமும் வெளிப்படையாகவே நடந்தது என்று கூறினார்.

    அயோத்தி விவகாரம், கங்கை நதி உள்ளிட்டவற்றுக்காக எவ்வித தண்டனையையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.

    பாராளுமன்றத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த இரண்டு எம்.பி.க்கள் இருந்த நிலைமாறி, இன்று மத்தியில் பா.ஜ.க. அரசு அமையும் அளவுக்கு ராமர் கோயில் விவகாரம், பா.ஜ.க.வின் எழுச்சிக்கு துணையாக இருந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    எனினும், தற்போது கோர்ட்டின் தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்த உமா பாரதி, இவ்விவகாரம் தொடர்பாக கோர்ட்டுக்கு வெளியே தீர்வு காணப்படும் சூழல் இன்றைய தீர்ப்பின் வாயிலாக உருவாகியுள்ளது.

    ராமர் கோயில் கட்டுவதற்காக எனது வாழ்க்கையை தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறேன். இதற்கான உறுதிமொழியை ஏற்பதற்காக இன்று அயோத்தி நகருக்கு புறப்பட்டு செல்கிறேன் என்றும் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×