search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய இறங்கிய 3 தொழிலாளர்கள் மூச்சு திணறி பலி
    X

    பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய இறங்கிய 3 தொழிலாளர்கள் மூச்சு திணறி பலி

    பெங்களுருவில் நள்ளிரவில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய இறங்கிய 3 தொழிலாளர்கள் மூச்சு திணறல் காரணமாக மயக்கம் அடைந்து பரிதாபமாக இறந்தனர்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு பையப்பன ஹள்ளி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கக்கதாசபுரா மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை குழியில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியே கசிந்து கொண்டு இருந்தது.

    இதை சரிய செய்ய நேற்று இரவு ஒரு டிராக்டரில் 3 தொழிலாளர்கள் அங்கு வந்தனர். பின்னர் பாதாள சாக்கடை குழி மேற்பகுதியின் மூடியை திறந்து, 2 தொழிலாளர்கள் சாக்கடை குழிக்குள் இறங்கினார்கள்.

    முன்னதாக அவர்கள் இரண்டு பேரும் தங்களுடைய உடலில் இறுக்கமாக கயிற்றை கட்டிக் கொண்டு, ஒரு பகுதி கயிறை டிராக்டரில் கட்டிக்கொண்டு பாதாள சாக்கடையில் இறங்கினார்கள்.

    சுமார் 15 அடி ஆழம் கொண்ட இந்த பாதாள சாக்கடை குழிக்குள் இறங்கியதும் அங்கு ஆக்சிஜன் மிக குறைவாக இருந்ததால் 2 பேருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இந்த மூச்சு திணறல் காரணமாக அவர்களால் உடனடியாக மேலே ஏறி வர முடியவில்லை.

    இதனால் சாக்கடை குழியின் மேலே நின்ற மற்றொரு தொழிலாளியிடம் தங்களை காப்பாற்றுமாறு கூக்குரல் விடுத்தனர்.

    இதையடுத்து 2 பேரையும் காப்பாற்ற மேலே நின்ற மற்றொரு தொழிலாளி தனது உடலில் கயிறை கட்டிக் கொண்டு சாக்கடை குழிக்குள் இறங்கினார். கீழே இறங்கியதும் ஆக்சிஜன் குறைவு காரணமாக அவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது.

    பின்னர் 3 பேரும் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டனர். இவர்களுடைய சத்தத்தை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவு 1 மணி அளவில் அங்கு வந்து சாக்கடை குழியில் இறங்கினார்கள். ஆனால், அதற்குள் 3 தொழிலாளர்களும் மூச்சு திணறல் காரணமாக மயக்கம் அடைந்து பரிதாபமாக இறந்து விட்டனர்.

    இதையடுத்து 3 பேருடைய உடல்களையும் மீட்டு பெங்களூரில் உள்ள பவுரிங் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    உயிரிழந்த 3 கூலி தொழிலாளர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் ? என்பது பற்றிய அடையாளம் தெரியவில்லை.

    அப்போது அவர்களிடம் பணி தொடர்பான எந்த விதமான அடையாள அட்டைகளும் இல்லாததால் அவர்களை பற்றிய விபரங்களை உடனடியாக கண்டுபிடிக்க இயலவில்லை.

    15 அடிக்கு கீழே இறங்கும் போது ஆக்சிஜசன் குறைவாகவே இருக்கும். எனவே முன் எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும். ஆனால் முன் எச்சரிக்கை இல்லாமல் இருந்திருக்கிறார்கள். இதுவே உயிரிப்புக்கு காரணம்.

    முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு இல்லாமல் 3 தொழிலாளர்களும் சாக்கடை குழியில் இறங்கி உள்ளதால் தான் இந்த உயிரிழப்புக்கு காரணம் என போலீசாருக்கு தெரியவந்தது.

    தேங்கிய கழிவுநீரை சுத்தப்படுத்தி இயக்குவதற்கு என பல்வேறு நவீன மிஷின்கள் வந்துள்ளன. இப்படிப்பட்ட நவீன மிஷின்களை பயன்படுத்தாமல் பாதாள சாக்கடைக்குள் தொழிலாளர்கள் இறக்கி இருக்கிறார்கள்.

    இதனால் காண்டிராக்டர் மற்றும் குத்தகைதாரர் ஆகியோர் மீது ஐ.பி.சி. 304 பிரிவின் கீழ் பையப்பன ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    சம்பந்தப்பட்ட காண்டிராக்டர் மற்றும் குத்தகை தாரர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    3 தொழிலாளர்கள் பலியான தகவல் கிடைத்ததும் இன்று காலை 8.45 மணி அளவில் பெங்களூரு நகர அபிவிருத்தி மந்திரி ஜார்ஜ் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

    அப்போது அவர் சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளையும் வரவழைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    மேலும், 3 தொழிலாளர்களின் குடும்பத்திற்கும் நிவாரண தொகையாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார்.
    Next Story
    ×