search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசியாவின் இதயம் மாநாடு பஞ்சாப்பில் இன்று தொடங்கியது
    X

    ஆசியாவின் இதயம் மாநாடு பஞ்சாப்பில் இன்று தொடங்கியது

    ஆப்கானிஸ்தான் நாட்டின் நலனை மையமாக கொண்டு நடைபெறும் ‘ஆசியாவின் இதயம் மாநாடு’ பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் நகரில் இன்று தொடங்கியது.
    அமிர்தசரஸ்:

    ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ‘ஆசியாவின் இதயம்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் மாநாடு நடத்தப்படுகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அதன் அண்டை நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தானுடனான பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    அதன்படி, 9-12-2015 அன்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் ஐந்தாவது ‘ஆசியாவின் இதயம்’ மாநாடு நடைபெற்றது. இதையடுத்து, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான அமிர்தசரஸ் நகரில் இந்த ஆண்டுக்கான ‘ஆசியாவின் இதயம்’ மாநாடு இன்று (சனிக்கிழமை) தொடங்கியது.

    ரஷியா, சீனா, துருக்கி உள்பட ‘சார்க்’ அமைப்பில் இடம்பெற்றுள்ள 14 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளும், அமெரிக்கா உள்ளிட்ட 17 இதரநாடுகளை சேர்ந்த உயரதிகாரிகளும் பங்கேற்கும் இந்த இரண்டுநாள் மாநாட்டின் முதல்நாளான இன்று மேற்கண்ட நாடுகளில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    நாளை நடைபெறும் இரண்டாம் நாள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியும் கூட்டாக தலைமை ஏற்கின்றனர்.

    அமிர்தசரஸ் நகரில் நடைபெறும் ‘ஆசியாவின் இதயம்’ மாநாட்டில் பாகிஸ்தான் கலந்துகொள்ளும் என அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் வெளியுறவுத்துறை ஆலோசகரான சர்தாஜ் அஜீஸ் முன்னர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

    எனவே, நாளை நடைபெறும் இரண்டாம்நாள் கூட்டத்தில் பாகிஸ்தான் அரசின் சார்பில் சர்தாஜ் அஜீஸ் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×