search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.ஏ.எஸ். அதிகாரி மரணம் தொடர்பாக விளக்கம் கேட்டு சி.பி.ஐ-க்கு நோட்டீஸ் அனுப்பிய மகளிர் ஆணையம்
    X

    ஐ.ஏ.எஸ். அதிகாரி மரணம் தொடர்பாக விளக்கம் கேட்டு சி.பி.ஐ-க்கு நோட்டீஸ் அனுப்பிய மகளிர் ஆணையம்

    ஊழல் புகாரால் தற்கொலை செய்து கொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.கே.பன்சாலின் மரணம் தொடர்பாக 48 மணி நேரத்திற்குள் விளக்கமளிக்குமாறு டெல்லி மகளிர் ஆணையம் சி.பி.ஐ-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    புது டெல்லி:

    மத்திய அரசின் கம்பெனிகள் விவகார டைரக்டர் ஜெனரலாக பணியாற்றி வந்த பி.கே. பன்சால் தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்துகொள்ள ரூ.9 லட்சம் லஞ்சம் கேட்டதாக கடந்த ஜுலை மாதம் சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், டெல்லியில் உள்ள பி.கே. பன்சாலின் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.60 லட்சம் பணம், 60 வங்கி கணக்குகள் மற்றும் 20 ஆவணங்களையும் கைப்பற்றினர்.

    லஞ்ச வழக்கில் பன்சால் கைதானதை தாங்கிக் கொள்ள முடியாமல் மனைவி சத்யபாலா (வயது 58), மற்றும் மகள் (வயது 27) இருவரும் ஜூலை மாதம் தற்கொலை செய்து கொண்டனர். தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி ஜாமீனில் வெளிவந்த பன்சால் அவரது மகனுடன் செப்டம்பர் 26-ம் தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இறப்பதற்கு முன் பன்சால் அவரது மகன் இருவரும் ’சி.பி.ஐ அதிகாரிகள் துன்புறுத்தியதே தங்களது தற்கொலை முடிவிற்கு காரணம்’ என எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதத்தைக் கைப்பற்றிய டெல்லி காவல்துறை, கடிதம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் பன்சால் குடும்பத்தினரின் மரணம் தொடர்பாக 48 மணி நேரத்திற்குள் விளக்கமளிக்குமாறு டெல்லி மகளிர் ஆணையம் சி.பி.ஐ-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணைய தலைமை அதிகாரி சுவாதி மாலிவால் கூறுகையில், “பன்சால் மரணம் தொடர்பாக சி.பி.ஐ இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். பன்சால் மற்றும் அவரது குடும்பத்தினரை தொந்தரவு செய்த அதிகாரிகள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்றும் விளக்கம் கேட்டிருக்கிறோம்.

    மூத்த அரசியல்வாதி மற்றும் உயர்மட்ட சி.பி.ஐ அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த வழக்கின் விசாரணை வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் நடக்க வேண்டும் என விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×