search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஸ்டிரைக்கால் குதிரை வண்டியில் குழந்தை பெற்ற பெண்
    X

    ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஸ்டிரைக்கால் குதிரை வண்டியில் குழந்தை பெற்ற பெண்

    பரைலி மாவட்டத்தில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பெண் ஒருவர் குதிரை வண்டியில் குழந்தை பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநில பரைலி மாவட்டம் மீரா கஞ்ச் என்ற இடத்தை சேர்ந்தவர் பிரேமாவதி (வயது 28).

    இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் பக்கத்து ஊரில் உள்ள கிராம சுகாதார ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். இதற்காக 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். ஆனால் உரிய நேரத்தில் ஆம்புலன்சு வரவில்லை.

    எனவே குதிரை வண்டியில் பிரேமாவதியை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவரச சிகிச்சை அளிக்க இந்த ஆஸ்பத்திரியில் சுகாதார பெண் ஊழியர்கள் இருவர் மட்டும் இருப்பது வழக்கம்.

    ஆனால் தற்போது இந்த ஊழியர்கள் சம்பள பிரச்சனை காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அந்த ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போது அங்கு ஊழியர்கள் யாரும் இல்லை.

    இந்த நிலையில் பிரேமாவதிக்கு பிரசவ வலி அதிகரித்தது. குதிரை வண்டியில் இருந்த படியே சிறிது நேரத்தில் அவர் குழந்தை பெற்றார். கிராமத்து பெண்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர்.

    இந்த பிரச்சனை உத்தரபிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பிரசவத்திற்கு பிறகு அந்த பெண்ணை மாவட்ட நிர்வாகத்தினர் வேறு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.
    Next Story
    ×