search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் முன்னிலையில் ஐதராபாத் நகரில் அனைத்து மாநில போலீஸ் டி.ஜி.பி., ஐ.ஜி.க்கள் கருத்தரங்கம்
    X

    பிரதமர் முன்னிலையில் ஐதராபாத் நகரில் அனைத்து மாநில போலீஸ் டி.ஜி.பி., ஐ.ஜி.க்கள் கருத்தரங்கம்

    நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த போலீஸ் டி.ஜி.பி.க்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படைகளை சேர்ந்த ஐ.ஜி.க்கள் பங்கேற்கும் ஆண்டாந்திர கருத்தரங்கை பிரதமர் மோடி முன்னிலையில் ஐதராபாத் நகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    நாட்டில் உள்ள சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை ஆய்வு செய்யவும், தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கவும் ஆண்டுதோறும் பிரதமர் முன்னிலையில் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த போலீஸ் டி.ஜி.பி.க்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படைகளை சேர்ந்த  ஐ.ஜி.க்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் தலைநகர் டெல்லியில் நடத்தப்படுவது வழக்கம்.

    நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் இந்த கருத்தரங்கம் கடந்த 2014-ம் ஆண்டு அசாம் மாநில தலைநகரான கவுகாத்தியிலும், கடந்த 2015-ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கட்ச் நகரிலும் நடைபெற்றது.

    இந்நிலையில், இந்த ஆண்டின் கருத்தரங்கை வரும் நவம்பர் மாதம் 25-27 தேதிகளில் ஆந்திர தலைநகரான ஐதராபாத்தில் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

    இந்த கருத்தரங்கில் எல்லை தாண்டிய தீவிரவாதம் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளால் இந்திய வாலிபர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு தீவிரவாதிகளாக மாறுவதை தடுப்பது தொடர்பாக நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த சுமார் 100 போலீஸ் டி.ஜி.பி.க்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படைகளை சேர்ந்த ஐ.ஜி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தவுள்ளனர்.

    மேலும், போலீஸ் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது, போலீஸ் துறையில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தம், கள்ளநோட்டு நடமாட்டம், போதைப்பொருள் மற்றும் ஆள்கடத்தலை தடுப்பது தொடர்பாகவும் இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்படவுள்ளதாக மத்திய உளவுத்துறை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
    Next Story
    ×