search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடிசா பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழப்பு 5 ஆக உயர்வு
    X

    ஒடிசா பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழப்பு 5 ஆக உயர்வு

    ஒடிசா மாநிலத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டம் தண்டி சாகி என்ற பகுதியில்  தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று மாலை தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, தொழிற்சாலையின் ஒரு பகுதியில் உள்ள பட்டாசுகள் வெடித்துச் சிதறின. தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு தொழிற்சாலையை விட்டு வெளியேறினர். பட்டாசுகள் நாலாபுறமும் சிதறியதால் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது உடலை மீட்டனர். மேலும் 12 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் நேற்று இரவு ஒருவர் இறந்தார். இன்று 3 பேர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது 6 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இவ்விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக குடோனில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாகவும், இது தற்செயலாக நடந்த விபத்தாக இருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
    Next Story
    ×