search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்துறைப்பூண்டியில் லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக போராட்டம்
    X

    திருத்துறைப்பூண்டியில் லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக போராட்டம்

    திருத்துறைப்பூண்டியில் லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் சேமிப்பு மையங்கள், அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

    இந்த பணிகளில் ஈடுபடும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் தொகையை அரிசி ஆலை உரிமையாளர்கள் கொடுக்க மறுப்பதாக குற்றம் சாட்டி லாரி உரிமையாளர்கள் திருத்துறைப்பூண்டியில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 56 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று லாரி உரிமையாளர்கள் திருத்துறைப்பூண்டி பள்ளங்கோவில் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல் ஏற்ற வந்த அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சொந்தமான லாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல கொக்கலாடி பகுதியிலும் லாரிகளை மறித்து போராட்டம் நடந்தது.

    போராட்டத்தில் லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஆறுமுகம், கவுரவ தலைவர் விஸ்வநாதன், செயலாளர் சீனிவாசன், துணைத்தலைவர் சேகர், துணை செயலாளர் குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. திருத்துறைப்பூண்டி பகுதியில் லாரி உரிமையாளர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×