search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 தொகுதி இடைத்தேர்தல்: கமல், சீமான் கட்சிகளும் குதிக்கின்றன- நாளை மனுதாக்கல் தொடக்கம்
    X

    4 தொகுதி இடைத்தேர்தல்: கமல், சீமான் கட்சிகளும் குதிக்கின்றன- நாளை மனுதாக்கல் தொடக்கம்

    நான்கு தொகுதி இடைத்தேர்தல்களில் கமல் மற்றும் சீமான் கட்சிகளும் குதிக்கின்றன. நாளை மனுதாக்கல் தொடங்குகிறது. #ByElection
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் கடந்த 18-ந்தேதி நடந்து முடிந்தது. பணப்பட்டு வாடா புகாரால் வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீதி உள்ள 38 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

    இதேபோல 18 சட்டமன்ற தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

    அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் (தனி), சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

    இதன்படி இந்த 4 தொகுதிகளிலும் அன்று தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன.

    ஆளும் கட்சியான அ.தி.மு.க., எதிர்க்கட்சியான தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் நேரடியாக மோதுகின்றன. தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மு.க. ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார். சூலூரில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன், ஒட்டப்பிடாரத்தில் சண்முகையா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    அ.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 4 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. இன்னும் சில தினங்களில் அக்கட்சி சார்பில் போட்டியிடுபவர்களின் பெயர்களை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் வெளியிட உள்ளனர்.

    தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது. தங்கள் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களை நாளை தினகரன் அறிவிக்கிறார்.

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை இருவரும் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு போட்டியாக அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் களம் இறங்கினார்கள். இதனால் தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவியது. 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அதே நிலை உருவாகி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் தினகரன், கமல், சீமான் ஆகியோரின் கட்சி வேட்பாளர்கள் கணிசமான அளவில் வாக்குகளை பெற்று இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. உளவு பிரிவு போலீசாரும் இது தொடர்பாக அறிக்கை அளித்துள்ளனர். இதன் காரணமாக இந்த 3 கட்சிகளின் நிர்வாகிகளும் உற்சாகமாக காணப்படுகிறார்கள்.

    அந்த வேகத்திலேயே 4 தொகுதி இடைத்தேர்தல் களத்திலும் குதிக்க தயாராகி உள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை முடிவு செய்யப்பட உள்ளனர்.

    4 தொகுதிகளிலும் நாளை (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. வருகிற 29-ந்தேதி வேட்பு மனுதாக்கலுக்கு கடைசி நாளாகும். 30-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. வேட்பு மனுக்களை திரும்ப பெற மே 2-ந்தேதி கடைசி நாளாகும்.

    இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் இன்னும் சில தினங்களில் பிரசாரத்தை தீவிரப்படுத்த உள்ளனர்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மே 1-ந்தேதி தனது பிரசாரத்தை தொடங்குகிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் பிரசார பயணமும் தயாராகி வருகிறது.

    தினகரன் 1-ந்தேதி முதல் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். கமல், சீமான் ஆகியோரும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் பதிவான ஓட்டுகள் மே 23-ந்தேதி எண்ணப்படுகின்றன. சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கையும் அன்றைய தினமே நடைபெறுகிறது. அன்று மாலையிலேயே அனைத்து தேர்தல் முடிவு களும் வெளியாகிறது.
    Next Story
    ×