search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெண்ணாம்பட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் ரெயில் மறியலுக்கு முயற்சி
    X

    வெண்ணாம்பட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் ரெயில் மறியலுக்கு முயற்சி

    வெண்ணாம்பட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் ரெயில் மறியலுக்கு முயன்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி பஞ்சாயத்து அடுத்துள்ள வி. ஜெட்டி அள்ளியில் 2500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த 2500 குடும்பத்தினருக்கும் ஒரே ஒரு குடிநீர் குழாய் மட்டுமே உள்ளது. இதனால் கடந்த 5 மாதத்திற்கும் மேலாக குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

    மேலும் இங்கு இருக்கக் கூடிய பொதுமக்கள் அதிகமானோர் கூலித் தொழில் செய்து வருகின்றனர். அன்றாட பிழைப்புக்கே கஷ்டப்பட்டு வரும் அவர்களுக்கு கடந்த 5 மாதத்திற்கு மேலாக குடிநீர் இல்லாததால், குடிநீரை காசு கொடுத்து வாங்கி வருகின்றனர்.

    மேலும் ஒரு டிராக்டர் தண்ணீரின் விலை ரூ. 800 க்கு வாங்க கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் 5 மாதத்திற்கு மேலாக குடிநீர் இல்லாதது குறித்து மனுவாக கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை கொடுத்தனர்.

    ஆனாலும் மேற்படி எந்த ஒரு நடவடிக்கையும் அரசு எடுக்காததால் வி.ஜெட்டி அள்ளியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் இன்று திரண்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது ஒருசிலர் வெண்ணாம்பட்டி ரெயில்வே தண்டவாளத்தில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

    அப்போது அவர்கள் ரெயில்வே கேட்டின் முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    பொதுமக்கள் சமாதானம் ஆகாததால் போலீசார் மறியலில் ஈடுபட்ட 4 பேரின் சட்டையை பிடித்து இழுத்து போலீஸ் வண்டியில் ஏற்றி சென்றனர். அந்த வாகனத்தை பொதுமக்கள் மறித்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×