search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்தப்பட்ட சூரியசக்தி கொள்கை விரைவில் வெளியிடப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
    X

    திருத்தப்பட்ட சூரியசக்தி கொள்கை விரைவில் வெளியிடப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    திருத்தப்பட்ட சூரியசக்தி கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். #EdappadiPalaniswami
    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் விரிவாக்கம் செய்யப்பட்ட செயிண்ட் கோபைன் கண்ணாடி தொழிற்சாலையை நேற்று தொடங்கிவைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு:-

    தொழில்நுட்ப அனுபவத்துடன் கூடிய மனிதவளம், தடையில்லா மின்சாரம், சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள், சிறப்பான சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, வெளிப்படையான மற்றும் எளிமையான அணுகுமுறை போன்ற தொழில் தொடங்க தேவையான அனைத்து சாதகமான சூழ்நிலைகள் தமிழ்நாட்டில் அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தொலைநோக்கு திட்டம்-2023, தமிழ்நாடு தொழில் கொள்கை-2014, மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் கொள்கை-2014, உயிரி தொழில்நுட்ப கொள்கை- 2014, தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் கொள்கை-2018, வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை-2019 ஆகியவை அரசால் வெளியிடப்பட்டன. திருத்தப்பட்ட சூரியசக்தி கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

    முதலீடு செய்யவரும் நிறுவனங்களுக்கு 30 நாட்களுக்குள் ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படுவதை வணிக எளிதாக்குதல் சட்டம் உறுதி செய்கிறது. 30 நாட்களுக்கு மேலாகும் பட்சத்தில், தானாகவே அனுமதி வழங்கப்பட்டதாக கருதப்படும் சரத்துகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்க புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கையை அரசு வெளியிட்டது. 2023-ம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 5 ஆயிரம் புத்தொழில்கள் உருவாக்கப்பட்டு, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

    சமீபத்தில் பாராளுமன்றத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்து ரிசர்வ் வங்கி சமர்ப்பித்த அறிக்கையில், தமிழ்நாட்டில் 2017-18-ம் ஆண்டில் கூடுதலாக 56 சதவீதம் முதலீடு பெறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டில் தமிழகம் சென்ற ஆண்டு 6-ம் இடத்தில் இருந்து, 2018-ல் 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது என தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அதிக தொழில் முதலீட்டினை ஈர்க்கும் வண்ணம் சென்ற வாரம் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதன் காரணமாக 3 லட்சத்து 431 கோடி ரூபாய்க்கு தொழில் முதலீடுகளும், சுமார் 10 லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு மேல் வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    செயிண்ட் கோபைன் நிறுவனம் தமிழ்நாட்டுடன் இதுவரை 4 ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு, அதன்மூலம் இதுவரை ரூ.3,400 கோடி முதலீடு செய்துள்ளது. 2015-ம் ஆண்டில் தனது 3-வது மிதவை கண்ணாடி தொழிற்சாலையை ரூ.800 கோடி முதலீட்டில் 5 ஆண்டுகளில் முடிக்க திட்டமிட்டு, தமிழக அரசின் ஒத்துழைப்புடன் மூன்றாண்டு காலத்திற்குள்ளேயே அந்த தொழிற்சாலை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதனை நான் தொடங்கிவைத்துள்ளேன்.

    இந்த நிறுவனம் தனது பன்னாட்டு முதலீடுகளில் அதிக அளவில் தமிழ்நாட்டில் தான் செய்துள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சி. உலக முதலீட்டாளர் மாநாட்டில் மேலும் ரூ.720 கோடி தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் ஒப்பந்தத்தில் செயிண்ட் கோபைன் நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது.

    பிளாஸ்டிக் தடை அறிவிப்பை முழுமையாக இந்த நிறுவனம் செயல்படுத்த வேண்டும். இந்த நிறுவனம் அதிக அளவில் தமிழ்நாட்டில் முதலீடுகளை செய்யவேண்டும். இதற்காக தமிழக அரசு உங்கள் நிறுவனத்திற்கு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், பென்ஜமின், எம்.பி.க்கள் வேணுகோபால், மரகதம் குமரவேல், பிரான்ஸ் தூதர் கேத்தரின் சுவார்டு, தொழில் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஞானதேசிகன், மதன்மிஸ்ரா, செயிண்ட் கோபைன் குழும தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரோ சேலண்டர், செயிண்ட் கோபைன் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகாஜன், மேலாண்மை இயக்குனர் பி.சந்தானம் மற்றும் பிரெஞ்ச் தூதரக அதிகாரிகள் பங்கேற்றனர். #EdappadiPalaniswami
    Next Story
    ×