search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் பட்டியலில் விவரங்களை அறிய செயலியை பயன்படுத்தலாம்
    X

    வாக்காளர் பட்டியலில் விவரங்களை அறிய செயலியை பயன்படுத்தலாம்

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை அறிய செயலியை பயன்படுத்தலாம் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.
    நாமக்கல்:

    நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. மேலும் புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற விண்ணப்பித்த நபர்களின் விவரங்களை சரிபார்த்தல் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் அரசு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ள அரசுத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் உதவி செயலியை பயன்படுத்தும் முறை குறித்து, தேர்தல் பிரிவு கணினி மைய அலுவலரால் அனைத்து அலுவலர்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    பின்னர் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் 18 வயது நிரம்பிய தகுதியான அனைத்து வாக்காளர்களும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் பணிகளை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும்.

    தங்கள் துறையில் பணியாற்றும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளனரா? என்பதை சரிபார்த்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ள வாக்காளர் உதவி செயலி என்ற செயலியை வாக்காளர்கள் தங்களிடம் உள்ள செல்போனில் ‘பிளே ஸ்டோரில்’ இருந்து பதிவிறக்கம் செய்து, அதன் மூலமாக வாக்காளர்கள் தங்களது பெயர் மற்றும் விவரங்களை உள்ளடு செய்து, தற்போது தங்கள் பெயர் இடம் பெற்றுள்ள வாக்குச்சாவடி மையத்தின் விவரம், வரிசை எண் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் வாக்காளர்களின் கடமை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் செயல்படும் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்த செயலியின் மூலமாக எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

    இக்கூட்டத்திற்கு வந்துள்ள அலுவலர்கள் முதலில் தங்கள் செல்போனில் இச்செயலியை பதிவிறக்கம் செய்வதுடன், தங்கள் அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இதுகுறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட வன அலுவலர் டாக்டர் காஞ்சனா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×