search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் அருகே போலி தாசில்தார் கைது- கார் பறிமுதல்
    X

    கரூர் அருகே போலி தாசில்தார் கைது- கார் பறிமுதல்

    கரூர் அருகே போலி தாசில்தார் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த காரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே ஓலப்பாளையம் பிரிவு சாலையில் தமிழ்நாடு அரசு முத்திரையுடன் கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் இது குறித்து கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் (மேற்கு) கிராம நிர்வாக அதிகாரி பூபதிக்கு தகவல் கொடுத்தனர். 

    அவர் அந்த இடத்திற்கு வந்து பார்த்த போது காரில் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். உடனே அவரிடம் விசாரித்தார். அப்போது அந்த நபர், தான் மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த பழனிவேல் (வயது 34) திருச்சியில் நெடுஞ்சாலைத்துறையில் தனி தாசில்தாராக பணிபுரிந்து வருவதாகவும் கூறியுள்ளார். 

    இதையடுத்து அவரிடமிருந்த அடையாள அட்டையை சோதனை செய்தபோது, அதில் கவர்மெண்ட்-ஆப் தமிழ்நாடு, ரிவன்யூ டிபார்ட்மெண்ட் கரூர் மாவட்டம் என்றும், தமிழ்நாடு அரசு முத்திரையுடன் இருந்தது. மேலும் காருக்குள் தேர்தல் சமயத்தில் அதிகாரிகள் பயன்படுத்தக் கூடிய 5 ரப்பர் சீல்கள் இருந்தன. 

    இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி பூபதி வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, விபரம் கேட்டபோது, பழனிவேல் அரசு அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது. 

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பழனிவேலுவை பிடித்து சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பழனிவேல் கடந்த 2002-ம் ஆண்டு கரூர் பகுதியில் பணியாற்றிய தாசில்தார் சசிக்குமாரிடம் தற்காலிக ஓட்டுநராக பணி புரிந்து வந்ததாகவும், பின்னர் 2004-ம் ஆண்டு மதுரை முதுகுளத்தூர் தாசில்தாரிடம் தற்காலிக ஓட்டுநராக பணியாற்றியதாகவும் தெரிவித்தார். மேலும், பழனிவேலை கைது செய்து, அவர் பயன்படுத்திய அரசு முத்திரையுள்ள காரை பறிமுதல் செய்து, விசாரணை செய்ததில், இவர் போலி தாசில்தார் என்றும், இவர் வேறு எந்தெந்தப் பகுதிகளில் தாசில்தார் எனக்கூறி, வசூல் வேட்டையில் ஈடுபட்டிருந்தார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×