search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரக்காணத்தில் உப்பளம் தண்ணீரில் மூழ்கியது.
    X
    மரக்காணத்தில் உப்பளம் தண்ணீரில் மூழ்கியது.

    மரக்காணத்தில் 3 நாட்களாக தொடர் மழை: உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின.
    மரக்காணம்:

    தென்மேற்கு வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    மரக்காணம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மத்திய-மாநில அரசுகளுக்கு சொந்தமான உப்பளங்கள் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளன. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மரக்காணம் பகுதிகளில் தொடர் மழை காரணமாக அங்குள்ள உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் உப்பு உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டது. உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 3 ஆயிரம் ஊழியர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

    மரக்காணம், பிரம்மதேசம், அனுமந்தை, சிறுவாடி, பெருமுக்கல், வண்டிப்பாளையம் உள்பட 25 கிராமங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் மின் கம்பங்கள் சேதமாகின. இதைத்தொடர்ந்து அந்த கிராமங்களில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் தடை செய்யப்பட்டது. மின்சாரம் இல்லாததால் அந்த கிராமங்கள் இருளில் மூழ்கியது.

    மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அந்த பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி வருகிறது. கழிவுநீர் கால்வாய் அடைப்பு காரணமாகவும், ஆக்கிரமிப்பு காரணமாகவும் மழைநீர் வெளியேற முடியாமல் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் புகுந்தது.

    இதனால் பிரம்மதேசம், வண்டிப்பாளையம் பகுதிகளில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. பல வயல்களில் உள்ள நெற்பயிர்கள் கீழே சாய்ந்தன. மேலும் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது.

    மரக்காணம் அருகே உள்ள ஓமிப்பேரில் கால் வாய் உடைந்ததால் ஊருக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அங்குள்ள காமராஜர் நகரில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.

    மரக்காணத்தை அடுத்த வடக்கோட்டிபாக்கம் பகுதியில் உள்ள வாய்க்கால் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் வந்தது. இதில் 20 வீடுகளை சூழ்ந்து தண்ணீர் நிற்கிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலையும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. உளுந்தூர் பேட்டை, எலவநாசூர் கோட்டை, சேந்தநாடு, ஆசனூர், திருவெண்ணைநல்லூர், திருநாவலூர், மடப்பட்டு, அரசூர் போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
    Next Story
    ×