search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து - ஊட்டியில் விழிப்புணர்வு தகவல் பலகைகள்
    X

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து - ஊட்டியில் விழிப்புணர்வு தகவல் பலகைகள்

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து ஊட்டியில் ஆங்காங்கே விழிப்புணர்வு தகவல் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீத வனப்பகுதிகள் உள்ளன. மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை அழகை பாதுகாக்கும் வகையில் பேப்பர் டம்ளர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், ஓட்டல்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று சோதனை நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அவற்றை பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிப்பதுடன் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஊட்டி-கூடலூர் மற்றும் ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற முக்கிய சாலையோரங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளது.

    சோதனைச்சாவடிகளில் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்காக தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பதாகைகள் வைக்கப்பட்டு இருக் கிறது.

    கடந்த மே மாதம் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு, அதுகுறித்து நீலகிரி மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நீலகிரியில் அமல்படுத்தப்பட்டு விட்டதால் நீலகிரி மாவட்டம் சார்பில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அடங்கிய விழிப்புணர்வு தகவல் பலகைகள் ஊட்டியில் முக்கிய இடங்களில் தற்போது வைக்கப்பட்டு உள்ளது. அதில் பிளாஸ்டிக் பொருட்களின் புகைப்படங்களும் இடம் பெற்று இருக்கிறது.

    ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு, அரசு தாவரவியல் பூங்காவின் முன்பகுதி உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டு உள்ளது. அனைத்து அளவு தடிமனாலான பிளாஸ்டிக் பைகள், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் கரண்டிகள், உறிஞ்சும் குழல்(ஸ்ட்ரா), காகித கப்புகள், டம்ளர்கள், லேமினேஷன் செய்யப்பட்ட பேக்கரி அட்டை பெட்டிகள், பிளாஸ்டிக் கையுறைகள் மடக்கு சீட்டு, பேக்கிங் மற்றும் பரிசு பொருட்கள் சுற்ற பயன்படும் பொருட்கள், பிளாஸ்டிக் வாழை இலை, பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள்,

    சில்வர் பூச்சு கொண்ட பைகள், பிளாஸ்டிக் தோரணம் மற்றும் கொடிகள், குடிநீர் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளன. இதனை மீறி பயன்படுத்தும் சில்லறை விற்பனையாளர்களுக்கு(½ கிலோ) ரூ.1000, மொத்த விற்பனையாளர்கள்(½ கிலோ) ரூ.5 ஆயிரம், திருமண மண்டபங்கள்(½ கிலோ) ரூ.20 ஆயிரம் என அபராதம் விதிக்கப்படும். பிளாஸ்டிக் இல்லாத நீலகிரியை உருவாக்குவோம் என்று அந்த பலகைகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஊட்டி மத்திய பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த தகவல் பலகையை பார்த்து, நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து தெரிந்து கொள்கின்றனர். 
    Next Story
    ×