search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயல் பாதித்த பகுதிகளை நாளை மறுநாள் பார்வையிடுகிறேன்- எடப்பாடி பழனிசாமி பேட்டி
    X

    புயல் பாதித்த பகுதிகளை நாளை மறுநாள் பார்வையிடுகிறேன்- எடப்பாடி பழனிசாமி பேட்டி

    புயல் பாதித்த பகுதிகளை நாளை மறுநாள் நேரில் சென்று பார்வையிட இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #Gaja #GajaCyclone
    சேலம்:

    சேலத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேள்வி: கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை எப்போது பார்வையிடுவீர்கள்?

    பதில்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட இன்றைய தினம் நான் செல்லலாம் என இருந்தேன். இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட மாலை வரை நீடிக்கின்றது.

    இங்கிருந்து சுமார் 350 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நாகப்பட்டினம் மற்றும் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இந்த புயலால் சேதம் அடைந்திருக்கிறது. இதையெல்லாம் பார்வையிட வேண்டும் என்றால் ஒரு நாள் முழுவதுமாக வேணும்.

    ஆகவே ஏற்கனவே புதிய பாலம் திறப்பு விழா மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் புதிய கட்டிடம் திறப்பு விழா, மருத்துவமனையில் மருத்துவ கருவி தொடக்கவிழா இப்படி என்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து விட்டார்கள்.

    அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள் அனைத்துக்கும் சென்று பார்வையிட கால நேரம் போதாதது என்ற காரணத்தினாலே இன்றைய தினம் செல்வதை தவிர்த்து செவ்வாய்க்கிழமை காலை நேராக சென்று கடலோர மாவட்டத்தில் உள்ள புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட செல்ல இருக்கின்றேன்.

    கே: மத்திய அரசுக்கு சேத மதிப்பீடு எப்போது அனுப்பப்படும்?

    ப: மத்திய குழுவுக்கு அனுப்ப இப்போது சேத மதிப்பீடு தயார் செய்து கொண்டிருக்கின்றோம். கஜா புயலால் கடுமையான சேதம். கிராம புறத்தில் இருக்கின்ற மரங்கள் எல்லாம் சாய்ந்து விட்டது. விவசாயிகளுடைய வாழ்வாதாரமே சீர்குலைந்து விட்டது. அவர்கள் பயிரிட்ட பயிர்கள் வாழை, தென்னை இப்படி பயிர்கள் எல்லால் புயல் காற்றால் முறிந்து சேதமாகி விட்டது.

    அதை எல்லாம் கணக்கிடுகின்ற பணி நடந்து கொண்டிருக்கின்றது. இந்த புயலால் இதுவரை 45 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். அதுபோல் கால்நடைகள் ஆடு, மாடுகள் பொறுத்தவரைக்கும் 735 கால் நடைகள் உயிரிழந்திருக்கின்றன.

    கே: எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் பாராட்டு தெரிவித்து இருக்கின்றார்கள்?

    ப: இது இயற்கை பேரிடர். இயற்கை நமக்கு எவ்வளவு பெரிய சோதனையை தந்து விட்டு போயிருக்கிறது. இதை மனிதாபிமான முறையில் அனைவரும் நாட வேண்டும். எதிர்க்கட்சியோ, ஆளுங்கட்சியோ என்ற பாகுபாடு இருக்கக் கூடாது.

    ஒட்டுமொத்த மக்களே இதில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதுதான் மனிதாபிமான செயல். ஊடக நண்பர்களாக இருந்தாலும் சரி, பொதுமக்களாக இருந்தாலும் சரி நம்முடைய மக்கள் பாதிக்கப்படும்போது, நம்முடைய குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் எப்படி மனநிலை ஏற்படுமோ, அதைப்போல் கருதி அந்த மக்களுக்கு தேவையான உதவிகளை அனைவரும் செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

    ப: அதிக அளவில் கிராம பகுதிகளில் மின்கம்பம் சாய்ந்திருக்கின்றது. இதை ஒரே நாளில் சரி செய்து விட முடியாது. வயல் பகுதிகளில் மின்கம்பங்கள் நிறைய சாய்துள்ளன. இந்த மின்கம்பத்தை எடுத்து அப்புறப்படுத்தி, புதிய மின் கம்பத்தை நிறுவக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. கம்பிகள் பொறுத்திதான் மின் வசதி செய்து கொடுக்க முடியும்.

    ஆங்காங்கே, ஜெனரேட்டர் வைத்து மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். முன்எச்சரிக்கையாக வைத்திருந்த ஜெனரேட்டரிகளில் இருந்த வயர்கள் எல்லாம் அறுந்து போய்விட்டது. இதையெல்லாம் சரி செய்துதான் மின்வசதி கொடுக்க முடியும்.

    கே: மத்திய பேரிடர் குழு நேரில் பார்வையிடுமா?

    ப: கடலோர மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை மத்திய பேரிடர் குழு நேரில் பார்வையிட்டு, சேதமதிப்பீட்டை கணக்கிட வேண்டும் என கேட்டிருக்கிறோம்.

    ப: போக்குவரத்து போகிற அளவுக்கு சாலையை சரி செய்துவிட்டாச்சு. சாலையில் ஒடிந்து விழுந்த மரங்கள் எல்லாம் இன்றைக்கு அகற்றப்பட்டு இருக்கின்றன. போக்குவரத்து துறை அமைச்சர் சொல்லி உள்ளார் இன்று மாலைக்குள் 100 சதவீத போக்குவரத்து இயக்கப்படும் என சொல்லி உள்ளனர்.

    கே: மத்திய அரசு அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்களா?

    ப: மீட்புப் பணியை பொறுத்தவரைக்கும் நம்முடைய மாநில அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அமைசர்களும் இன்று செல்ல உள்ளனர். நிலவரத்தை எல்லாம் கண்டறிந்து தேவைப்பட்டால் மத்திய அரசுடைய அதிகாரிகள் வரவழைத்து அந்த மீட்புப் பணிகள் எல்லாம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×